நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான கனிம வளங்களை கேரளாவிற்கு எடுத்துச் செல்லும் லாரிகள் தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அதில் நூற்றுக்கணக்கான வாகனங்களில் கேரளாவிற்கு கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இந்த வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் கடந்து அதிக எடை கொண்ட கனிம வளங்களை எடுத்துச் செல்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில், இன்று காலை முதல் புளியரை சோதனை சாவடி வழியாக கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு எடை போடப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகிறது.
கொடுக்கப்பட்ட வரம்பை மீறி அதிக கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு ஒவ்வொரு டன்னுக்கும் 1,000 ரூபாய் என அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலைமுதல் சுமார் பதிமூன்று வாகனங்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையின் இரு புறங்களிலும் தொடர்ந்து சுமார் 2 கிலோமீட்டருக்கு கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளது.