திருச்சி லலிதா ஜூவல்லரியில் சுவற்றை துளைப்போட்டு கீழ் தளத்தில் உள்ள தங்கம், டைமண்ட் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. கொள்ளையர்களை பிடிப்பதற்கு என்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் 7 இன்ஸ்பெக்டர்களை கொண்ட 7 தனிப்படை அமைத்து பல்வேறு முனைகளில் கொள்ளையர்களை கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் லலிதா ஜூவல்லரியின் உரிமையாளர் கிரண் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, நகைக்கடையில் இன்று அதிகாலை திருட்டு சம்பவம் குறித்து தகவல் அறிந்து உடனடியாக இடத்துக்கு வந்த திருச்சி மாநகர காவல்துறை விசாரணையில் இறங்கியுள்ளது. எனக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்று நடைபெற்ற கொள்ளையில் ரூபாய் 13 கோடி மதிப்புள்ள தங்கம் பிளாட்டினம், வைர நகைகள் 700 முதல் 800 எண்ணிக்கையில் நகைகள் மட்டுமே கொள்ளையடித்துள்ளனர். மேலும் கடையின் தரை தளத்தில் மட்டுமே திருடியுள்ளார்கள். காவல்துறையினர் கடையில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆராய்ந்த வருகிறார்கள். இரண்டு கொள்ளையர்கள் மட்டுமே கடை உள்ளே வந்திருக்கிறார்கள். மற்றவர்கள் வெளியியே எத்தனை பேர் என்று தெரியவில்லை.
நகையை கொள்ளையடித்தவர்கள் நல்ல தொழில்முறை திருடர்கள், முகமூடி எல்லாம் அணிந்து வந்துள்ளார்கள் என்பது தெரிகிறது. போலீசார் நல்ல ஒத்துழைப்பு வழங்குவதாகவும், கொள்ளையர்களை விரைவில் பிடித்து களவுபோன நகைகளை விரைவில் மீட்டு தருவார்கள் என நம்பிக்கை உள்ளது என்றார்.
இந்த கடையில் தரை தளத்தில் மட்டும் 200 கிலோ தங்க நகைகள் இருந்துள்ளன. ஆனால் அதில் குறைந்தது 13 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்கள் மட்டுமே திருடுபோய் உள்ளது. கண்ணாடி அறையில் வைத்துள்ள நகைகள் எதையும் கொள்ளையர்கள் தொடவில்லை.
அது மட்டுமல்லாமல் துளைப்போட்ட இடம் கடையின் மேலாளர் அறை. அந்த அறையில் துளைபோட்டால் மட்டுமே தரை தளத்திற்கு வர முடியும் என்பதை இந்த கடையை நன்கு அறிந்தயாரோ தான் திருடிருக்க வாய்ப்பு உள்ளது என்கிற ரீதியில் விசாரணை சென்று கொண்டிருக்கிறது என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.