திருச்சியில் மின்னல் தாக்கி மாடுகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் ராஜீவ் காந்தி என்பவர் விவசாயம் செய்வதுடன் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் குமுளூரில் தனக்கு சொந்தமான இடத்தில் மாட்டு பட்டி அமைத்து 4 மாடுகளை வளர்த்து வருகிறார். மேலும் மாடுகளின் உணவுக்கு தேவையான 100 வைக்கோல் கட்டுகளை அடுக்கி வைத்துள்ளார். நேற்று மாலை மழை பெய்வது போல் இருந்திருக்கிறது. அப்போது மாட்டின் பட்டிக்கு அருகே ராஜீவ் காந்தி சென்றபோது திடீரென பலத்த சத்தத்துடன் இடி மின்னல் சத்தம் கேட்டதுடன் தனது மாட்டு பட்டியின் மீதும், அங்கு இருந்த மரம் மற்றும் வைக்கோல் மீது தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதைக் கண்ட ராஜீவ் காந்தி அருகே சென்றபோது 4 மாடுகளும் மின்னல் தாக்கி பலியானது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைக்க போராடி உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த புள்ளம்பாடி தீயணைப்பு மீட்புப் படையின் நிலைய அதிகாரி பாரதி தலைமையில், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். மேலும் சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இடி மின்னல் தாக்கி பலியான மாடுகள் மற்றும் வைக்கோல் ஆகியவற்றின் மதிப்பு 3 லட்சத்திற்கும் மேல் சேதமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. மின்னல் தாக்கி மாடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.