திருச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து கோவைக்கும் அங்கிருந்து திருச்சிக்கும் புதிதாக அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள் மக்கள் புழக்கத்தில் வருவதாகவும் அந்த நோட்டுகளை ஒரு இளம் பெண் திருச்சி கிராப்பட்டி, எடமலைப்பட்டி புதூர் வார சந்தைகளில் ஒவ்வொரு நோட்டுகளாக கொடுத்து மக்கள் புழக்கத்தில் விட்டதும். அதை தீவிரமாக ஒரு கடைக்காரர் கண்காணித்து போலிசில் சிக்கவைத்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போல் பாலக்கரை, கீழப்புதூர், துரைசாமிபுரம் பகுதிகளில் பெண்களிடம் சில்லரை கேட்பது போன்று 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் ஒரு ஒரு நோட்டுகளாக உலாவிட்டுக்கொண்டுயிருந்தது.
அப்போது தான் இந்த கள்ளநோட்டு கும்பல் வெளிமாநிலங்களில் இருந்து திருச்சியை குறிவைத்து வந்திருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் திருச்சியிலே கள்ளநோட்டு அடிக்க ஆரம்பித்து விட்ட சம்பவம் திருச்சி மக்களிடையே பெரிய பீதியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கே.கே நகர், எல்ஐசி காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரு கும்பல் கள்ள நோட்டுகளை அச்சடிப்பதாகவும் அந்த வீட்டில் இருக்கும் மர்மநபர்கள் இரவில் மட்டுமே வெளியே வருவதாகவும் லோக்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து அந்த பகுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். போலிசார் இந்த சோதனையில் திருச்சி எல்.ஐ.சி காலனி பகுதியைச் சேர்ந்த சுப்பன் மகன் பாட்ஷா, திருச்சி காஜாமலை, காளியம்மன் கோயில்தெருவில் வசிக்கும் வெங்கடாசலம் மகன் கனகராஜ் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தேவா தியேட்டர் பகுதியைச் சேர்ந்த சூர்யமூர்த்தி மகன் ராஜா சபரேஸ் எனத் தெரியவந்தது. அவர்களை அழைத்துக்கொண்டு அந்த வீட்டிற்கு அழைத்து சென்று வளைத்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது உள்ளே மூன்று பேர் ரூ.2,000 ரூ.500 நோட்டுகளை அடுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் விசாரித்த போது அவர்கள் ஜெராக்ஸ் செய்து கள்ள நோட்டுக்களை தயார் செய்து புழக்கத்தில் விடுவது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டு கட்டுகள், ஜெராக்ஸ் மெஷின் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர்.