விபத்தில் இறந்தவர்களின் உடல்களை வழி அனுப்பிவைத்த திருச்சி கலெக்டர்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஆரல்வாய்மொழியைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம்(வயது 70). ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவரது உறவினர்களான கோட்டாறு, வடசேரி பகுதிகளைச் சேர்ந்த 16 பேர் நேற்று மாலை ஒரு டெம்போ வேனில் திருப்பதி புறப்பட்டனர்.
இதில் 8 ஆண்கள், 5 பெண்கள், 2 குழந்தைகள் பயணம் செய்தனர். வேனை ஆரல்வாய்மொழியை சேர்ந்த ராகேஷ் (33) என்பவர் ஓட்டி வந்தார். நேற்று இரவு சுமார் 11.45 மணியளவில் அவர்களது வேன் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த மூரணிமலை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த போர்வெல் லாரி மூரணிமலை பகுதியில் ஓய்வெடுப்பதற்காக சாலையோரம் நிறுத்த முயன்றார் ஓட்டுநர். அப்போது பின்னால் வந்த டெம்போ வேன் பயங்கர வேகத்தில் லாரி மீது மோதியது.
மோதிய வேகத்தில் வேன் பல மீட்டர் தூரம் லாரியுடன் இழுத்துச்செல்லப்பட்டது. வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. நள்ளிரவு நேரம் என்பதால் அதில் பயணம் செய்த குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.
மேலும் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் வேனின் ஜன்னல் கண்ணாடிகள் அனைத்தையும் மூடி இருந்தனர். இந்த விபத்தில் வேனில் இருந்த 9 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியும், கண்ணாடி, வேனின் பாகங்கள் குத்தியும் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் துவரங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்கபூர் தலைமையில் போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று உயிருக்கு போராடியவர்களை மீட்டனர். வேனில் முன்பகுதி சுமார் 5 அடிக்கு உள்ளே சென்றதால் அதன் இடிபாடுகளுக்குள் இருந்தவர்களை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மத்திய மண்டல ஐ.ஜி.வரதராஜூலு ஆகியோரும் உடனடியாக விபத்து நடந்த பகுதிக்கு வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சு வேன்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வைத்திலிங்கம் (79) உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆனது.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்த டிரைவர் ராகேஷ், கார்த்திக் (12), தானம்மாள் (42), வடசேரி வைஷ்ணவி (21), வேலாதேவி (35) ஆகியோர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவர்களில் வேலாதேவி, தானம்மாள் ஆகியோரின் கணவர்களும், வைஷ்ணவி என்பவரின் தந்தையும் பலியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நள்ளிரவில் நடந்த இந்த விபத்து காரணமாக சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இன்று திருச்சி அரசு மருத்துவனைக்கு 10 உடல்களையும் கொண்டு வந்தவர்கள் உடனே பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டவர் நேரடியாக ‘பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் சொல்லி இந்த அகால மரணத்திற்கு எங்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம். தமிழக அரசுக்கு உங்கள் குடும்பம் பற்றிய சூழ்நிலையை அனுப்பியிருக்கிறோம்’ என்றார்.
குழந்தையை பறிகொடுத்த தாய் எனக்கு என் குழந்தை வேண்டும் என்று அழுது புரண்டதும், அங்கு இருந்தவர்களின் உள்ளங்களை கரைத்தது.
திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர் ஆகிய இடங்களில் இருந்து ஆம்புலேன்களை வரவழைத்து போஸ்ட்மார்டம் செய்த உடல்களை அனுப்பி வைத்தார்.
- ஜெ.டி.ஆர்