கரோனா இந்தியாவில் நாளுக்கு நாள் பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசின் சுகாதாரத்துறை தீவிரமாக களம்மிறங்கியுள்ளது. கரோனோ நோயை கட்டுப்படுத்த, குணப்படுத்த மருந்துகள், தடுப்பு மருந்துகள் என எதுவும் இல்லை. இதனால் உலகம் முழுக்கவே இதனை கட்டுப்படுத்த மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.
தமிழகத்தில் கரோனோ நோய்க்கு அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை என அறிவிக்கப்பட்டது. பின்னர் சில தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டும் கரோனோ நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்கலாம் என அனுமதி தந்துள்ளது. அப்படி அனுமதிக்கப்பட்டாலும் அதுப்பற்றிய தகவல்களை உடனடியாக அந்த பகுதி அரசு நிர்வாகத்துக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சி.எம்.சி மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சை அளிக்க அனுமதி தந்துள்ளது அரசு. இந்நிலையில் அரசின் உத்தரவை மீறி சில தனியார் மருத்துவமனைகளும் கரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
வேலூர் மாவட்டம், கொணவட்டம் பகுதியை சேர்ந்த ஒருவர் கரோனா நோய் பாதிப்புக்கு உள்ளாகி கடந்த வாரம் இறந்தார். இவர் நோய் முற்றிய நிலையிலேயே சி.எம்.சி வந்து அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவிக்கும் கரோனா இருந்து அவரும் சி.எம்.சியில் அனுமதிக்கப்பட்டார். குடும்பத்தாரிடம் வருவாய்த்துறையினர் விசாரித்தபோது, மதனி கிளினிக்கில்தான் அவர் முதன் முதலாக காய்ச்சல், சளி என சிகிச்சை பெற்றுள்ளார். அந்த மருத்துவரின் பரிந்துரையின் பேரிலேயே, இந்திரா நர்சிங் ஹோமில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே நர்சிங் ஹோமில், மனைவியும் பின்னர் அனுமதிக்கப்பட்டார். இவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்தது அன்னை லேபாரட்டரி என தெரியவந்தது.
கரோனா சிகிச்சை அளிக்க அனுமதி பெறாத இந்த நர்சிங் ஹோம், கிளினிக் மற்றும் ஆய்வகத்தின் செயல்பாடுகளை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதனை தொடர்ந்து இந்திரா நர்சிங் ஹோம், மதனி கிளினிக், அன்னை லேபராட்டரி போன்றவைக்கு ஏப்ரல் 16ந்தேதி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் இந்திரா மருத்துவமனையின் பிரதான மருத்துவமனை வேலூர் நகரம் சைதாப்பேட்டை பகுதியில் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் மூவர், அவருக்கு சிகிச்சை அளித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. அதனை தொடர்ந்து 17.04.20 ஆம் தேதி காலை 7 மணி அளவில் இந்த மருந்துவமனையின் சிறப்பு மருந்துவர்களின் மூன்று அறைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முக சுந்தரம் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை ஆய்வாளர் நாகராஜ் போன்றோர் சென்று மூடி சீல் வைத்தனர்.
அவர்கள் சிகிச்சை பெற்ற நேரத்தில் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், உடனிருந்த பிற நோயாளிகள் என அனைவருக்கும் கரோனா டெஸ்ட் எடுக்க முடிவு செய்யப்பட்டு அவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறது மாவட்ட நிர்வாகம்.