குப்பைக்கு வரி... ஈரோடு மாநகராட்சி முற்றுகை!
ஈரோடு மாநகராட்சி குப்பைக்கு வரி விதித்துள்ளதை கண்டித்து இன்று ஈரோடு வரி செலுத்துவோர் சங்கம் அனைத்து தொழில் வணிகசங்கங்களின் நுகர்வோர் சங்க அமைப்பினர் மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இச்சங்கத்தின் தலைவரான ந. பாரதி கூறும் போது.
"ஈரோடு மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்த வருபவரிடம் குப்பை வரி என ஒரு தொகையை சேர்த்து கட்டாய வசூல் செய்கின்றனர். குப்பை வரி திடக்கழிவு மேலாண்மை விதிப்படி வசூல் செய்வதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். திடக்கழிவு மேலாண்மை துணைவிதியில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகள் எதையும் ஈரோடு மாநகராட்சி செய்வதில்லை. குப்பை மூலம் வருவாய் ஈட்டக்கூடிய பல வழிகள் இருந்தும் குப்பைக்கு பொருத்தமற்ற முறையில் கட்டணம் நிர்ணயம் செய்கிறார்கள்.
குடியிருப்புகளுக்கு சதுர அடி விகிதத்தில் கட்டண நிர்ணயம் செய்திருக்கிறார்கள். 15 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரிகளுக்கு மாதம் ரூ 3 ஆயிரம், டீக்கடைக்கு ரூ 300, தள்ளுவண்டிக்கு ரூ 200, மீன், கோழி இறைச்சி கடைக்கு ரூ 200, துணிக்கடைக்கு ரூ 5 ஆயிரம் என்று பொறுத்தமற்ற வகையில் நிர்ணயம் செய்துள்ளார்கள். இவ்வாறு பொறுத்தமற்ற முறையில் விதிக்கப்பட்டுள்ள குப்பை வரியை கைவிடவேண்டும்.
அதேபோலவே சொத்து வரியை 4 மடங்குக்கு மேலாக உயர்த்தி விட்டனர். ரூ 22 ஆயிரம் வரி செலுத்தியவருக்கு இனி ரூ 99 ஆயிரம் வரி விதிப்பு என அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு பற்றி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இது போன்ற கடும் வரி உயர்வால் சொத்தை கொஞ்சம் கொஞ்சமாக விற்று தான் வரி செலுத்த நேரிடும். தற்போது வணிக நிலை படு மோசமாக உள்ளது. ஈரோட்டின் ஜவுளி மற்றும் தோல் தொழில்கள் ஸ்தம்பித்த நிலையில், ஜி.எஸ்.டி. காரணமாக மேலும் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈரோடு மாநகராட்சி தற்போது உத்தேசித்துள்ள இந்த கடுமையான வரி உயர்வு மக்களை வெகுவாக பாதிக்கும். எனவே மக்கள் விரோத வரி உயர்வு நடவடிக்கையை உடனே மாநகராட்சி கைவிட வேண்டும்." என்றார் இதையே அரசுக்கு மனுவாகவும் அனுப்பியுள்ளார்கள்.
- ஜீவாதங்கவேல்