கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிகளில் சுற்றிவருவதாகக் குனியமுத்தூர் பகுதி மக்கள், அவ்வப்பொழுது வனத்துறைக்குத் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களுக்கு முன் குனியமுத்தூர் அருகே, பி.கே.புதூர் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் அச்சிறுத்தை பதுங்கியிருப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் அந்தக் குடோனில் சிறுத்தை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்தக் குடோன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை வனத்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
மேலும், குடோனில் பதுங்கியுள்ள சிறுத்தையைக் கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர். திட்டமிட்டனர். அந்தக் குடோனில் கூண்டு அமைத்து அதில், தண்ணீர் மற்றும் இறைச்சி ஆகியவற்றை வைத்தனர். ஆனால், கூண்டுக்கு அருகில் வரும் சிறுத்தை சுதாரித்துக்கொண்டு கூண்டில் வைக்கப்பட்டுள்ள உணவை சாப்பிடாமல் சென்றபடியே இருந்தது. கடந்த ஐந்து நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்ளாமல் அச்சிறுத்தை அந்தக் குடோனுக்குள்ளேயே சுற்றிவந்த நிலையில், நேற்றிரவு உணவுத் தேடி அந்தக் கூண்டுக்குள் வந்து அடைபட்டது. அதனைத் தொடர்ந்து இன்று அச்சிறுத்தை அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.