Skip to main content

மீன் பிடித்துத் திரும்பிய போது மீனவர்களுக்கு நேர்ந்த சோகம்

Published on 19/08/2022 | Edited on 19/08/2022

 

Tragedy happened to the fishermen when they returned after catching fish!

 

சீர்காழி அருகே பழையார் முகத்துவாரத்தில் மணல் திட்டில் சிக்கி இரண்டு விசைப் படகு கவிழ்ந்து சேதமடைந்தது, 8 மணி நேரத்திற்கு மேலும் மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுத் தவிக்கின்றனர்.

 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள பழையார் துறை முகத்திலிருந்து செழியன், சுரேந்தருக்கு சொந்தமான விசைப்படகில் 10 பேர் அதிகாலை வேளையில் மீன்பிடித்துக்கொண்டு கரை திரும்பியுள்ளனர். அப்போது முகத்துவாரத்தில் இரண்டு படகுகளும் தரை தட்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு படகில் இருந்த மீனவர்களும் கடலுக்குள் விழுந்து தத்தளித்துள்ளனர்.  

 

கடலில் தத்தளித்த 10 மீனவர்களையும் அருகில் இருந்த சக மீனவர்கள் மீட்டு கரைசேர்ந்தனர். தொடர்ந்து மூன்று விசை படகுகளின் உதவியுடன் கடலில் மூழ்கிய படகை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் செழியன் விசைப்படகு முற்றிலும் கடலில் மூழ்கி சேதம் அடைந்தது. சுரேந்தர் என்பவரது படகை மீட்டு கரை சேர்த்தனர். மேலும் கடலில் மூழ்கி முற்றிலும் சேதம் அடைந்த செழியனுக்கு சொந்தமான விசைப்படகை மீட்கும் பணியில் சக மீனவர்கள் சுமார் 8 மணி நேரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

 

இது குறித்து மீனவர்கள் கூறுகையில், "கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும் அதிகளவு தண்ணீரால் பழையார் கடற்கரை முகத்துவாரம் தூர்ந்து மண் மேடாகி போய்விட்டது. ஒவ்வொரு முறையும் திறந்து விடப்படும் அதிகப்படியான தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே பழையார் கடலில் கலந்த பிறகு முகத்துவாரம் தூர்ந்துவிடுகிறது. தூர்வார அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்பொழுது சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்கிறார்கள்.

 

மீனவர்களின் வாழ்வியலில் தினசரி ஏதோ ஒரு பிரச்சனை வந்து அவர்களின் வாழ்வாதாரத்தை முழ்கடித்து விடுகிறது என்பது தான் சமீபத்திய உண்மை.

 

 

சார்ந்த செய்திகள்