சாலை விபத்துகளைத் தவிர்க்க சாலையில் பூசணிக்காய் உடைத்ததால் போக்குவரத்து உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மதுரவாயல், வானகரம், வேலப்பன்சாவடி, பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலை பகுதிகளில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளைத் தவிர்க்க காவல்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரவாயல் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பழனி மற்றும் காவலர் சிலருடன் திருநங்கை ஒருவரை காவல் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களில் பூசணிக்காய் மற்றும் எலுமிச்சை பழத்தைக் கொண்டு திருஷ்டி சுற்றியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், சாலையில் பூசணிக்காய் உடைக்க வேண்டாம் என்று கூறும் காவல்துறையே இப்படி செய்தால் என்ன நியாயம் என இணையவாசிகள் வறுத்தெடுத்தனர்.
இந்த நிலையில், மதுரவாயல் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பழனி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விபத்துகளைத் தடுக்க அறிவியல் பூர்வமாகச் செயல்பட வேண்டுமே தவிர இதுபோன்று தனிநபர் நம்பிக்கையை மேற்கொள்ளக் கூடாது எனப் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.