கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்ததைக் கண்டித்து வியாபாரிகள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வரத் தடை விதிக்கப்பட்டது. இதனால், கொடைக்கானலில் சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கக் கோரியும் வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடைகளை அடைத்து கடந்த சில நாளுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் அதிகாரிகள் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டனர்.
இந்நிலையில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கொடைக்கானல், மூஞ்சிக்கல் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் சுற்றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், குதிரை சவாரி தொழிலாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்பட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்ற பின்னர் அவர்கள் திடீரென அப்பகுதியில் கஞ்சித் தொட்டியைத் திறந்து வைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அங்கு காய்ச்சப்பட்ட கஞ்சியை வியாபாரிகள் உள்பட அனைவரும் குடித்தனர். இந்தப் போராட்டம் காரணமாக கொடைக்கானல் ஏரி சாலை உள்பட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. இதனால், நகர்ப் பகுதியில் உள்ள சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இந்நிலையில், நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் சந்திரன், போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருகிற 26-ஆம் தேதி வியாபாரிகளின் கோரிக்கைகளை குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகப் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.