தருமபுரம் ஆதீனத்தில் இன்று (22/05/2022) பட்டணப் பிரவேச நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால், அதற்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் இந்தாண்டு பட்டணப் பிரவேச நிகழ்ச்சியை நடத்த கோட்டாட்சியர் தடை விதித்தது சர்ச்சையானது. பின்னர், அந்த தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து, பட்டணப் பிரவேச நிகழ்ச்சி, கடந்த மே 12- ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று (21/05/2022) நாற்காலி பல்லக்கில் தருமபுரம் ஆதீனம் உலா வந்தார்.
திருமடத்தில் இருந்து புறப்பட்ட அவர், குருமகான் சன்னிதானத்தில் வழிபாடு செய்தார். இந்த நிலையில், முக்கிய நிகழ்ச்சியான பட்டணப் பிரவேசம் இன்று (22/05/2022) நடைபெறவுள்ளது. இதனையொட்டி, மின் விளக்குகள் மற்றும் வாழைத் தோரணங்களால் திருமடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்கவிருப்பதாலும், நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்பினர் போராடக் கூடும் என்பதாலும், ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.