Skip to main content

“தமிழகத்தில் அடாவடித்தனமாக கட்டணம் வசூல் செய்யும் சுங்கச்சாவடிகள் கைப்பற்றப்படும்” - வேல்முருகன் 

Published on 05/03/2022 | Edited on 05/03/2022

 

Toll gate issue TVK Velmurugan press meet

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வந்திருந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இருந்து கும்பகோணம் வரை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதுகுறித்து மத்திய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால் அந்த குண்டும் குழியுமாக உள்ள சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவமும் நிகழ்ந்தது. 

 

அந்தச் சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாற்று நடும் போராட்டம் நடத்த உள்ளோம். தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் விவசாய நிலங்கள் வழியாக பூமிக்கு அடியில் குழாய்கள் பதித்து ஆயில் கொண்டு செல்லும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் அதேவேளையில், உயர் கோபுர மின் கம்பங்கள் அமைத்து புதிய பாதையை வெளிமாநிலங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், மின் கோபுரங்கள் அமைக்கும் நிலம் மற்றும் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் குழாய் பதித்து எடுத்துச்செல்லும் நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாமல் இருக்கிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்கிய பின்னரே அதில் குழாய்கள் அமைப்பது உயர் கோபுர மின் கம்பங்கள் அமைப்பதும் பணி தொடர வேண்டும். விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கொடுக்காத வரை பணிகளை செய்யக்கூடாது. 

 

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அஞ்சல் துறையில் தமிழகத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு மத்திய அரசு தேர்வு முறையில் பணிநியமனம் செய்து வருகிறது. அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் வெறும் 46 பேர் மட்டுமே பணி அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். மற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு வடமாநிலத்தவர்கள் பணியில் அமர்த்தப்படுள்ளனர். அதை மத்திய அரசு ரத்து செய்துவிட்டு தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 90% வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி இந்திய அஞ்சல் துறைக்கு சொந்தமான சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தைப் பூட்டு போட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சுங்கச்சாவடிகள் நான்கு வழிச்சாலை அமைக்க வேலையை முழுமையாக சாலை போடும் பணியை செய்யாமல் கட்டண வசூல் செய்வதில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அப்படி அடாவடித்தனமாக சுங்க கட்டணங்களை வசூல் செய்யும் சுங்கச்சாவடிகளை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம் நடத்தி சுங்கச்சாவடிகளை விரைவில் கைப்பற்றும்” எனக் கடுமையாக பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்