Skip to main content

இன்று தமிழ்நாட்டில்.. பனைவிதை திருவிழா.. உற்சாகமாக பங்கேற்ற இளைஞர்கள்!

Published on 22/09/2019 | Edited on 22/09/2019

மண்ணையும், நீரையும் காக்க பனை விதை.. என்று நம்மாழ்வார் கிராமம் கிராமாக சென்று சொன்னார். ஒரு பனை படுகிறது என்றால் அங்கே நிலத்தடி நீர் கீழே போகிறது. பெரிய ஆபத்து உள்ளது என்பதை உணர வேண்டும் என்று தொடர்ந்து வழியுறுத்தி வந்தார். அதே நேரத்தில் தான் செங்கல் சூளைகளுக்காக பனை மரங்களை வெட்டி அழித்துக் கொண்டிருநதார்கள். எஞ்சிய பனையும் சூளையில் எரிந்து சாம்பல் ஆனது.

 

palm


அவர் மறைந்தாலும் அவர் சொன்னதை சில ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி நடைமுறைப்படுத்தி வந்தது. சில ஆண்டுகளாகவே பனை விதைகளை சேகரித்து பொது இடங்களில் நட்டு வந்தனர். நம்மாழ்வார் மறைவுக்கு பிறகு அவர் சொன்ன இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பு போன்ற விழிப்பணர்வுகள் இளைஞர்கள் மத்தியிலும் வேகமாக பரவியது. அதன் தாக்கம் தான் நீர்நிலைகளை சீரமைக்கவும் சீரமைத்த நீர்நிலைகளில் மரக்கன்றுகளை நட்டு, பராமரிப்பதும் குறுவனம் அமைப்பது என்று இளைஞர்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை வருங்கால சந்ததிக்காக செலவிட்டு தங்கள் உழைப்பையும் கொடுத்து வருகிறார்கள். அதில் ஒரு பகுதிதான் பனை விதைப்பு.

 

pp


இளைஞர்கள் விடுமுறை நாட்களில் கேளிக்கைகளுக்கு செல்லாமல் சொந்த ஊர்களுக்கு வந்துவிடுகிறார்கள். வரும் இளைஞர்கள் நீர்நிலை சீரமைப்பு, மரக்கன்று நடுதல், பனை விதை சேகரிப்பு என்று விடுமுறையை பயனுள்ளதாக கழித்துவிட்டு செல்கிறார்கள். உள்ளூரில் இருக்கும் மாணவர்கள், இளைஞர்களும் தொடர்ந்து அந்தப் பணிகளை செய்து வருகின்றனர். அதில் ஒரு நாள்தான் செப்டம்பர் 22 ஞாயிற்றுக் கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் இளைஞர்களால் சீரமைக்கப்பட்ட நீர்நிலைகளில் பனைமரக்காதலர்கள் என்ற அமைப்பின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வெளியூர்களில் வேலையும் இளைஞர்கள் இணைந்து பெரிய குளம் ஏரியின் கரைகளிலும், காட்டாற்றில் இருந்து ஏரிக்கு தண்ணீர் வரும் கால்வாய் கரைகளிலும் 4 அடிக்கு ஒரு பனை வீதம் சுமார் 7 ஆயிரம் பனை விதைகளை விதைத்தனர்.

 

pp

 

அதே ஊரில் இளைஞர் மன்றத்தினரால் சீரமைக்கப்பட்ட கோடி குளத்தில் அப்பகுதி இளைஞர்கள் சுமார் 5 ஆயிரம் பனை விதைகளை விதைத்தனர். மறமடக்கி கிராமத்தில் நீர்நிலை பாதுகாப்பறிக்காக உருவாக்கப்பட்ட இளைஞர் குழுவினர் வழக்கம்போல குழந்தைகளை வைத்தே பனை விதை திருவிழாவை தொடங்கி சுமார் 5 ஆயிரம் விதைகளை விதைத்துள்ளனர். ஆலங்குடி கோயிலூர் பகுதியில் பனை விதைகளை இளைஞர்கள் விதைதுள்ளனர். 

 

pp

 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள கானூர் கிராமத்தில் கிரீன் நீடா ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு தலைமையில் தொடங்கிய பனை விதை திருவிழாவில் மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டு பனை விதைப்பை தொடங்கி வைத்து பேசினார். நல்லதொரு முன்னெடுப்பாக உள்ளது. இதேபோல எங்கே பனை விதைப்பு திருவிழா நடந்தாலும் என் பங்கும் இருக்கும் என்றார்.

இப்படி இன்று ஒரு நாளில் மட்டும் கணக்கிலடங்கா பனை விதைகளை இளைஞர்கள் விதைத்து சாதனை படைத்துள்ளனர். மேலும் வாரம் முழுவதும் விதை சேகரிப்போம் ஒவ்வொரு விடுமுறை நாளிலும் பனை விதைப்போம் என்கிறார்கள் இளைஞர்கள். 

 

சார்ந்த செய்திகள்