தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4, குரூப் 2 ஏ தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து சிபிசிஐடி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து 40- க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த முறைகேடுகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், குரூப்-4, குரூப்-2ஏ தேர்வுகள் முதல்நிலை, முதன்மைத் தேர்வு என இருநிலை தேர்வுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர்கள் விடையளிக்க வேண்டும், தேர்வர்களை அடையாளம் காண விடைத்தாள்களில் விரல் ரேகை கட்டாயம், ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் விடைத்தாள்கள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்படும் உள்ளிட்ட பல தீர்மானங்களும் கொண்டுவர கொண்டுவரப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு நடைபெறும் தேர்வுக்கு தேர்வர்கள் காலை 9 மணிக்கே தேர்வுக் கூடங்களுக்கு வரவேண்டும். தேர்வெழுதும் தேர்வர்களின் மெய்த்தனமையை உறுதி செய்ய, விதியை விளக்க 2 மணிக்கே வரவேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு அறிவித்துள்ளது.