இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. மேலும் நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதற்கிடையே தமிழக சட்டப் பேரவையில், நீட் விலக்கு சட்டமுன்வடிவிற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 28 ஆம் தேதி (28.06.2024) கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். இதனையடுத்து முதலமைச்சரின் தனி தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். அதனைத் தொடந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழக அரசு மாநில கல்விக் கொள்கையை தாயரித்திருந்தது.
இந்நிலையில் 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர். என். ரவி மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி சார்பாக ஆளுநர் மாளிகையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “நான் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து, தமிழ்நாட்டில் உயர் கல்வியை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான வழிகள் மற்றும் முறைகள் பற்றி விவாதித்தேன்.
திறன் மற்றும் கல்வி மூலம் நமது மாநில இளைஞர்களின் நலனில் ஆழ்ந்த அக்கறை கொண்ட அவருக்கு மிகவும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று பிரதமர் மோடி, நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரை ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.