16வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (11/05/2021) காலை 10.00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் கூடியது. இதில், தேர்தலில் வெற்றி பெற்ற புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றனர். இவர்களுக்குத் தற்காலிக சபாநாயகர் கு. பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் சிவசங்கர், மதிவேந்தன் இருவரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை; சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவில்லை.
தமிழக சட்டப்பேரவையில் முதலில் சட்டமன்ற உறுப்பினராக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' எனும் நான் எனக் கூறி சட்டமன்ற உறுப்பினராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வரைத் தொடர்ந்து, அவை முன்னவரான அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக, அமைச்சர்கள், அ.தி.மு.க., தி.மு.க., மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
அப்போது, தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் உளமாற என உறுதிமொழி கூறி சட்டப்பேரவையில் பதவியேற்றுக் கொண்டனர். அதேபோல், அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடவுள் அறிய உறுதியேற்பதாகக் கூறி சட்டப்பேரவையில் பதவியேற்றுக் கொண்டனர்.
இதனிடையே, தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக ராதாபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாவும், துணை சபாநாயகராக கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டியும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.