Skip to main content

''சின்னப் பிரச்சனை என்றாலே அது திமுக கூட்டணியில் தான் ஏற்படும்!'' - ஜி.கே.வாசன் பேட்டி! 

Published on 04/01/2021 | Edited on 04/01/2021

 

tmc gk vasan pressmeet

 

தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (04.01.2021) திருச்சியில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது அவர் பேசுகையில், ''இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருச்சி, கரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்கள் இணைந்து மண்டல அளவிலான கூட்டம் நடைபெற்று வருகிறது. தேர்தல் களப் பணிகள் துவங்குவதற்கும், தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணியில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கைகள் குறித்து பேசுவதற்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடங்கியிருக்கிறோம்.

 

நேற்று முன்தினம் திருநெல்வேலியில் தென் மண்டல கூட்டம் நடைபெற்றது. நேற்று ஈரோட்டில் கொங்கு மண்டல கூட்டம் நடைபெற்றது. இன்றைய தினம் திருச்சியில் மண்டல கூட்டம் நடைபெறுகிறது. கூட்டணிக் கட்சிகளுடைய செயல்பாடு குறித்தும், எதிர்க்கட்சியுடைய செயல்பாடு குறித்தும் கலந்து ஆலோசித்து வருகிறோம். தேர்தல் நெருங்கும்போது படிப்படியாக செய்யக்கூடிய பணிகள் குறித்தும் விவாதித்து இருக்கிறோம்.

`

சட்டமன்றத்தில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள் என்ற உறுதியான நிலையை எடுத்திருக்கிறோம். தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடும். சின்னப் பிரச்சனை என்றாலே அது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டணியில் தான் ஏற்படும். மண்டல கூட்ட ஆய்வு முடிந்த பிறகு மாவட்டத் தலைவர்களுடன் பேசி, உண்மை களநிலவர நிலையை அறிந்து பிறகு தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சியோடு பேசவுள்ளோம்.

 

உடல்நிலை சரியில்லை என்பது எல்லோருக்குமானதுதான். ரஜினிக்கு உடல்நிலை சரியாகி நீண்ட நாள் வாழவேண்டும் என்பதுதான் தமிழ் மாநிலக் காங்கிரசுடைய விருப்பமும், என்னுடைய விருப்பமும் கூட.

 

முதன்மைக் கட்சியாக விளங்கும் அதிமுக யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கிறதோ அவர்களோடு இணைந்து தமிழ் மாநிலக் காங்கிரஸ் கண்டிப்பாகப் பணியாற்றும். தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவரான  நான் அதிமுகவோடு கூட்டணி குறித்துப் பேசினால்தான், எங்கள் கட்சிக்கு எந்தத் தொகுதியை ஒதுக்குகிறார்கள் என என்னால் சொல்ல முடியும்.

 

தென்மாவட்டம் முழுவதும் அழகிரி உயர்ந்த பொறுப்பில் இருந்து இருக்கிறார். அவருடைய வார்த்தையின்படி ஸ்டாலின் முதல்வராக மாட்டார். வெறும் போஸ்டரில் மட்டும் தான் அவர்களால் முதல்வர் என்ற பெயரை பயன்படுத்த முடியும் என்று அவர் கூறியிருப்பது அவருடைய கருத்து. எங்களுடைய மடியில் கனமில்லை. என்னுடைய நேர்மையை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அதனால் எங்களுக்கு வழியில் பயமில்லை.

 

மக்கள் நலன் கருதி தேர்தலை சரியாகவும் முறையாகவும் நடத்த வேண்டும். கரோனா தடுப்பு மருந்துகள் இந்தியாவில் வரும் நிலையில் இதில் எதிர்க்கட்சிகள் ஒருபோதும் எதிர்ப்போ, வேறு பிரச்சனைகளையோ கிளப்ப வேண்டாம். விவசாயிகள் விழித்துக்கொள்ள வேண்டும். 7-ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள். பல்வேறு நன்மைகளைத் தரக்கூடிய இந்தச் சட்டத்தில் விவசாயிகள் சிந்தித்துச் செயல்பட வேண்டும். எதிர்க்கட்சிகளுடைய பேச்சைக்கேட்டு விவசாயிகள் உங்களுடைய வாழ்வாதாரத்தை அழித்துக் கொள்ள வேண்டாம்.

 

திருச்சி மாவட்ட அளவில் நெற்பயிர்கள் மற்றும் மானாவாரி பயிர்களான உளுந்து, கடலை போன்றவை நீர் நிரம்பி வழியும் நிலைக்கு வந்து விட்டது. அரசு தலையிட்டு உடனடியாக நிவாரணம் வழங்கவேண்டும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்