டிடிவி கூட்டத்திற்கு தலைக்கு 500 ரூபாய், வேஷ்டி, சேலை, சரக்கு, பிரியாணி!
அதிமுக துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து டிடிவியை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் ஓரம் கட்டியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வருகிற 14ம் தேதி மதுரை அருகே உள்ள மேலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் டிடிவி தலைமையில் முதன் முறையாக நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை டிடிவியின் தீவிர ஆதரவு எம்எல்ஏ-வான தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் மற்ற ஆதரவு எம்எல்ஏ-க்களும் விழா ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.
அதோடு தங்களது ஆதரவாளர்கள் மூலம் பொதுக்கூட்டத்திற்கு பெரும் திரளாகவே கட்சிக்காரகளையும், பொதுமக்களையும் திரட்டி டிடிவியின் பலத்தை காட்ட இருக்கிறார்கள். அதற்காக கடந்த 12ம் தேதி தேனி மாவட்ட செயலாளரும், ஆண்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினரும்மான தங்க தமிழ்செல்வன் தலைமையில், தேனியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளை அழைத்து மதுரையில் நடக்கும் கூட்டத்துக்கு பெரும் திரளாக தொண்டர்களையும் மக்களையும் அழைத்துவர ஆலோசனை வழங்கினார்.
இதுபற்றி கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சி நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, முதன் முறையாக அண்ணன் டிடிவி தலைமையில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. அந்த கூட்டத்துக்கு பெரும் திரளாக ஆட்களைக் கொண்டு வந்து சேர்ப்பதின் மூலம் எடப்பாடியே அதிர்ச்சி அடையவேண்டும். அதனால் கூட்டத்துக்கு வரும் கட்சிக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் யார் வந்தாலும் தலைக்கு 500 ரூபாய், வேஷ்டி, சேலையுடன் பிரியாணியும் கொடுக்கசொல்லி அண்ணன் டிடிவியே மறைமுகமாக சொல்லி இருக்கிறாராம். அதன் அடிப்படையில் தான் கூட்டத்திற்கு ஆட்களை திரட்ட இருக்கிறோம்.
தேனி மாவட்டம் போலவே உசிலம்பட்டி உள்பட தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூகத்தில் உள்ள பிரமலைகள்ளர் பெரும்பாண்மையாக இருப்பதால் அவர்களையும் சாதி தலைவர்கள் மூலம் கூட்டத்திற்கு கொண்டுவர இருக்கிறார்கள். அதோடு ஒரு வேனுக்கு 25 பேர் யார் சேர்த்து விட்டாலும் அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் என ஏஜெண்ட் போனஸ்சும் இருக்கிறது என்றனர். ஆக மதுரை மேலூரில் நடக்க இருக்கும் டிடிவி-யின் மாபெரும் கூட்டத்தைக் கண்டு எடப்பாடி அரசு ஆட்டம்காணப் போகிறது!
- சக்தி