தீட்சிதர்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு;
போராட்டம் நடத்த தில்லை திருமுறை மன்றத்தினர் முடிவு
சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் திருமுறை நிகழ்ச்சிக்கு அதிக கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து தில்லை திருமுறை மன்றத்தினர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த மூன்று ஆண்டுகளாக தில்லை திருமுறை மன்றம் சார்பில் தினமும் மாலை நேரத்தில் மேல கோபுர வாயில் அருகே திருமுறை ஓதுதலும் விளக்கமும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இதற்கு கோயிலின் தீட்சிதர்கள் கடந்த பிப் 16ஆம் தேதி முதல் ஒரு நாளைக்கு ரூ 5 ஆயிரம். மாதத்திற்கு ரூ1.5 லட்சம் பணம் கொடுத்துவிட்டு நடத்திகொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். இதற்கு திருமுறை மன்றத்தினர் இது தமிழ் உணர்வுடன் யாரிடமும் பணம் வாங்காமல் நடத்தபடும் நிகழ்ச்சி எனவே தீட்சிதர்கள் கேட்கும் பணத்தை கொடுக்கமுடியாது என்றனர். இதனால் கடந்த ஐந்து மாதங்களாக திருமுறைகள் நிகழ்ச்சி நடைபெறாமல் தடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் திருமுறைகள் நிகழ்ச்சியை தீட்சிதர்கள் பெயரளவுக்கு நடத்தி வருகிறார்கள். இதனை தொடர்ந்து திருமுறைகள் மன்றத்தினர் செவ்வாய் மாலை உலகத்தில் உள்ள சிவனடியார்கள் அனைவரும் அவரவர் இல்லத்திலோ அல்லது அருகில் உள்ள ஆலயத்திலோ, பொது இடங்களிலோ திருமுறைகள் கண்டெடுத்த தில்லை கோயிலில் தினமும் திருமுறை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற கூட்டுபிரார்த்தனை செய்யக்கோரி அழைப்பு விடுத்தனர். அதன் அடிப்படையில் சிதம்பரம் கமலீஸ்வரன் கோயிலில் சிதம்பரம் தில்லை திருமுறை மன்றம் சார்பில் கூட்டுபிரார்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவனடியார்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்.
பின்னர் இதுகுறித்து திருமுறைகள் மன்ற ஒருங்கிணைப்பாளர் முருகையா, நிர்வாகி செங்குட்டுவன் கூறுகையில், மீண்டும் கோயிலில் திருமுறைகள் நிகழ்ச்சியை நடத்த பலவிதத்தில் தீட்சதர்களிடம் அனுமதி கோரினோம் மறுத்து விட்டனர். கோயிலில் சிறப்பான முறையில் திருமுறைகள் நிகழ்ச்சி நடைபெற வரும் 15ஆம் தேதிக்குள் அனுமதி கொடுக்கவில்லையென்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து சிவனடியார்களை ஒருங்கிணைத்து சிதம்பரத்தில் போராட்டம் நடத்ததிட்டமிட்டுள்ளோம் என்றார்.
- காளிதாஸ்