செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 24 அடியில் (இன்று காலை நிலவரப்படி) நீர்மட்டம் 22 அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 309 கனஅடியாக உள்ள நிலையில், நீர் திறப்பு 349 கனஅடியாக குறைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஐந்து நாட்களாக வெளியேற்றப்பட்டு வந்த உபரிநீர் தற்போது நிறுத்தப்பட்டது. இந்த ஏரியில் இருந்து உபரிநீர் 9,000 கனஅடி வரை திறக்கப்பட்ட நிலையில் நீர் திறப்பு முழுமையாக நிறுத்தப்பட்டது.
இதனிடையே, இந்த ஏரியில் நீர் வெளியேற்றப்படும் மதகில் சகதி, செடிகள் சிக்கிக் கொண்டதால் நீர் திறப்பு நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. மதகை அடைப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நீர் திறப்பு இல்லாதபோதும் 320 கனஅடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.