Published on 05/05/2020 | Edited on 05/05/2020
தமிழகத்தில் கரோனா அதிவேகமாக பரவிவருகிறது. இன்று மட்டும் 508 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளநிலையில், தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் மே 7ஆம் தேதியை நோக்கி ஆர்வத்துடன் குடிமக்கள் காத்திருக்கும் இவ்வேளையில், குடை கொண்டு வந்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து கொள்ளலாம். 6 அடி சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். கடையில் 5 பேருக்கு மேல் இருக்கக் கூடாது. ஊழியர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். கடை வளாகத்தை கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளது.