Skip to main content

“பழசுக்கு திரும்புங்க” பண்டமாற்று முறையை கையிலெடுத்த மக்கள்!

Published on 27/04/2020 | Edited on 27/04/2020
p

 

கரோனாவினால் இயற்கை மருத்துவம் மீட்டெடுக்கப்பட்டு மக்கள் மத்தியில் பாரம்பரிய உணவு வகைகள் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் கரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருப்பதால் விளைந்த விவசாய பொருட்களை வெளியில் கொண்டு செல்ல வழி இல்லாத காரணத்தால், உள்ளூரில் விளையக்கூடிய பொருட்களை தங்களுக்குள்ளேயே மாற்றிக் கொள்வது என அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகேயுள்ள செட்டித்திருக்கோணம் கிராம மக்கள் முடிவெடுத்துள்ளனர். நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த பண்டமாற்று முறையையே மீண்டும் கையிலெடுத்துள்ளனர்.

 

p

 

காந்தியடிகள் சொன்ன கிராம பொருளாதாரம் என்பது வெறுமனே பணத்தை மையப்படுத்துவது அல்ல. இந்த பண்டமாற்று முறையில் வரும் நன்மைகள் குறித்து செட்டித்திருக்கோணம் கிராம மக்களிடையே கேட்டபோது அவர்கள் கூறியதாவது, பண்டமாற்று முறை வியாபாரத்தில் பணம் பிரதானமாக பார்க்கப்படுவது கிடையாது. இதனால் தாறுமாறாக விலையை ஏற்றி மக்களை வாட்டி வதைக்கும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு விலைவாசி உயர்வு என்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது என்கின்றனர்.

இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு முற்றிலும் பலனை விவசாயிகளை சென்றடையும். மண் சார்ந்த உணவுகளை பகிரும்போது இயல்பாகவே அது பொதுமக்களின் உடல் நலனுக்கும் நல்லதாகவே இருக்கும். பண்டமாற்று முறை மூலம் வெறும் பொருள் வியாபாரம் மட்டுமல்ல அன்பும் பரிமாற்றம் செய்யப்படுகிறது. யாருக்கு என்ன பொருள் வேண்டுமோ அதற்கு மாற்றாக தங்கள் வயலில் விளைந்த பொருட்களை பரிமாறிக் கொள்ளப்படும். உதாரணமாக, வெங்காயம் விளைவித்தவர்கள் கடலையை பரிமாறிக் கொள்வர். கத்தரிக்காய் உற்பத்தி செய்தவர்கள், வெண்டைக்காயை பகிர்ந்து கொள்வர். கீரைகள் விளைவித்த ஒருவர், கிழங்குகளுக்கு அதை பரிமாறிக் கொள்வார். நெல் விளைந்தவர்கள் பருத்தியை பகிர்ந்து கொள்வர். சுண்ணாம்புக்கல் உற்பத்தி செய்பவர் வெல்லம் வாங்கி கொள்வர்.

 

p

 

இதன் மூலம் பணம் பிரதான பொருளாக இருக்கவே இருக்காது. இதுதான் உண்மையான கிராம பொருளாதாரமாக இருக்கும். இதன் மூலம் ஆக்கப்பூர்வமான தொழில்கள் பட்டியலில் விவசாயமே பிரதான தொழிலாக முதன்மை இடத்தில் இருக்கும்.

இதனால் தற்சார்பு பொருளாதாரம் மேன்மை அடையும் என்று “பழசுக்கு திரும்புங்க” என அதிரடித்துள்ளனர் கிராம மக்கள். பணப்பொருளாதாரம் மிகவும் மக்களை கடனாளிகளாக ஆக்கிவிட்டது. முதன்மை படுத்திய பணப் பொருளாதாரத்தை உடனடியாக கைவிட்டு பண்டமாற்று முறைக்கு திரும்புவோம் என கிராம மக்கள் அறைகூவல் விடுத்துள்ளது பொருளாதார மந்தத்தை தூக்கி நிறுத்தும் என்று ஆணித்தரமாக தங்களது கருத்தை பதிவு செய்கின்றனர் கிராம பொருளாதார மேதைகள். இவர்கள் மேலும் கூறுகையில், பணப்பொருளாதாரம் முழுவதும் தோல்வியையே தழுவியுள்ளது. பணப்பொருளாதாரம் நம்மை கடன்காரர்களாக்கி விட்டதை நாங்கள் உணர்ந்து விட்டோம். எனவே பண்டமாற்று முறையை தீவிரப்படுத்துவோம் என்றனர் கிராம மக்கள்.

 

சார்ந்த செய்திகள்