ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், நெல்லை டவுன் பகுதியின் போஸ் மார்க்கெட் காய்கறி கடைகள் புதுப்பிக்கப்பட உள்ளது. மேலும் கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையின் பொருட்டும், போஸ் மார்க்கெட்டின் சில்லறை காய்கறி விற்பனை கடைகள், அங்கிருந்து பொருட்காட்சி திடல், பார்வதி சேஷ மஹால் எதிர்புறம் உள்ள மைதானம், கண்டியப்பேரி உழவர் சந்தை என மாற்றப்பட உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் அதற்கான உத்தரவை அறிவித்தது. ஆனால் இந்த தற்காலிக மூன்று இடங்களுக்கு மாற்றப்படுவதையும், அங்கு செல்வதற்கும் வியாபாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஒருசிலர் பொருட்காட்சித் திடலிலும் கடைகளை அமைத்திருந்தனர்.
இதனிடையே டவுன் போஸ் மார்க்கெட் சில்லறைக் கடை வியாபாரிகளுக்கும், தரை தள வியாபாரிகளுக்கும் ஒரே இடத்தில் கடைகளை ஒதுக்கித் தர வேண்டும். மூன்று இடங்களுக்கு அலைக்கழிக்கக் கூடாது என வலியுறுத்தி டவுனை சேர்ந்த வியாபாரிகள் அழகேசன், இளஞ்செழியன், ஜெபராஜ் மற்றும் லோடு மேன்களான சுரேஷ் உள்ளிட்டோர்கள் அதிகாலை ஐந்தரை மணிவாக்கில் பெட்ரோல் கேனுடன் டவுன் போஸ் மார்க்கெட்டிற்குள் நுழைந்தனர்.
உள்ளே சென்ற 5 பேர்களும், உள் புறமாகப் பூட்டிக் கொண்டு தீக்குளிக்கப் போவதாகப் போலீசாருக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்க, அங்கு பரபரப்பு பற்றிக் கொண்டது.
ஸ்பாட்டுக்கு வந்த டவுன் போலீஸ் உதவி கமிஷ்னர் சதீஷ்குமார், டவுன் இன்ஸ்பெக்டர் ராமேஷ்வரி உள்ளிட்ட போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். வெளியேவர மறுத்த அவர்கள் மாநகராட்சி ஆணையர் வர வேண்டும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அடம் பிடித்தனர். இதையடுத்து அங்கு வந்த மாநகராட்சி நெல்லை மண்டல உதவி ஆணையர் சொர்ணலதா உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரிக்கையை வலியுறுத்தியவர்கள், உறுதி தர வேண்டும் இல்லையேல் 5 பேரும் தீக்குளிப்போம் என்றும் பிடிவாதமாகத் தெரிவித்தனர்.
பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய உதவி ஆணையர் அவர்களின் கோரிக்கைப்படி ஒரே இடத்தில் ஒதுக்கும்படியான, மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம் எதிரேயுள்ள மைதானத்தில் ஒதுக்கப் பரிந்துரைப்பதாக கடிதம் கொடுத்த பிறகே 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு வெளியே வந்தனர். அவர்களிடமிருந்த பெட்ரோல் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வருவாய் அதிகாரியின் புகார்படி 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மாலையில் அவர்கள் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 5 லோடு மேன்களின் 3 மணி நேர தீக்குளிப்பு முயற்சிப் போராட்டத்தின் அந்தப் பகுதி தவிப்பும், பரபரப்புமாய் இருந்தது.