சாதாரண, சின்னச் சின்ன குற்றங்களில் ஈடுபடுகிற குற்றவாளிகளிடம் நெல்லை மாவட்டத்தின் அம்பை சப்.டிவிசன் ஏ.எஸ்.பி.யான பல்வீர் சிங் மனிதாபிமானம் எள் முனையுமில்லாமல் மிகக் கொடூரமாக நடந்து கொள்கிறார். எங்களின் பற்களைக் கட்டிங் பிளேயரால் கோரத்தனமாகப் பிடுங்கியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையிலும், மாவட்ட ஆட்சியரான கார்த்திகேயனிடமும் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சுபாஷ், லட்சுமி சங்கர், வெங்கடேஷ் மூவரும் புகார் கொடுக்க, கலெக்டர் அந்தப் புகாரை சேரன்மகாதேவி சப் கலெக்டர் முகம்மது சபீர் ஆலத்திற்கு அனுப்பி விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டிருக்கிறார். இந்தப் புகார் குறித்த தகவல் வெளிவந்த மறு நொடி தென் மாவட்டம் மட்டுமல்ல தமிழகத்தையே உலுக்கி விட்டது.
கடந்த மார்ச் 27 அன்று மூன்று பேரும் ஏதோ ஒரு நிர்ப்பந்தம் காரணமாக சப் கலெக்டரின் விசாரணைக்கு ஆஜராகாமல் போனது விவகாரத்தின் வீரியத்தை விரிவாக்கி பரபரப்பைக் கொளுத்தி விட்டது. கடந்த ஆண்டு அக்டோபரில் நெல்லை மாவட்டத்தின் அம்பை சரக ஏ.எஸ்.பி.யாக வடமாநிலத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் பொறுப்பேற்றார். அன்றிலிருந்து அவரின் நடவடிக்கைகள் அதிரடிதான்.
நம்மிடம் பேசிய அந்த போலீசார் விரிவாகவே சொன்னார். கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு அடிதடி வழக்கில் சிக்கிய கல்லிடைக்குறிச்சியின் சுபாஷ், லட்சுமி சங்கர், வெங்கடேஷ் மூவரும் அடுத்தடுத்து கல்லிடைக்குறிச்சியின் காவல் நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளனர். தகவலறித்து அங்கு வந்த ஏ.எஸ்.பி.பல்வீர் சிங் அவர்களிடம் விசாரணை நடத்தியவர் அங்குள்ள அறை ஒன்றில் அவர்களைத் தனித் தனியே வரவழைத்து அவர்களின் வாயில் ஐல்லிக் கற்களைப் போட்டு பற்களைக் கடிக்கும்படி லத்தியால் அடித்தவர், அவர்களின் தலை பிடறியையும் தாக்கியிருக்கிறார். வேதனையில் கதறியவர்கள் வாயில் இருந்த கற்களை கடித்ததால் பற்களில் ரத்தம் கொப்பளித்து பற்கள் கலகலக்க அது சமயம் கட்டிங் பிளேயரால் அவர்களின் பற்களைக் கதறக் கதறப் பிடுங்கி அனுப்பியிருக்கிறார். அடிக்கும்போது அவர்கள் திமிறாமலிருக்கவும், பற்களைப் பிடுங்க தோதுவாக அவர்களின் கைகள், தலையைப் பிடித்துக் கொள்ள அங்குள்ள இரண்டு கான்ஸ்டபிள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இப்படியே மூன்று பேரின் பற்களைப் பிடுங்கி எறிந்திருக்கிறார் ஏ.எஸ்.பி., எந்த ஒரு குற்றச் செயல் என்றாலும் அவர்களிடம் மிகக் கடுமையாக இரக்கத்தன்மை சிறிதுமின்றிக் கொடூரமாக நடந்து கொள்ளும் ஏ.எஸ்.பி.யிடம், கடந்த சில நாட்களுக்கு முன்பு சி.சி.டி.வி. கேமராவை உடைத்ததாகத் தரப்பட்ட புகார் குறித்து விசாரிப்பதற்காகப் பிடிபட்ட ஜமீன் சிங்கம்பட்டியைச் சேர்ந்த சூர்யா என்ற வாலிபரை ஆஜர்படுத்தியிருக்கிறார்கள். அவரையும் தன்னுடைய ஆபரேஷன் பாணியில் கட்டிங் பிளேயரால் அவரின் 3 பற்களை அரக்கத்தனமாகப் பிடுங்கியிருக்கிறார் ஏ.எஸ்.பி., அத்துடன் விடாமல் சி.சி.டி.வி. கேமராவை உடைத்ததற்கு இழப்பீடாக 45 ஆயிரம் பணத்தைப் பெற்ற பிறகே அவரை ரிலீஸ் செய்திருக்கிறார்.
இதையடுத்து தான் அந்தக் கூட்டுக் கொடூரத் தண்டனை நடந்துள்ளது. வி.கே.புரம் பக்கமுள்ள சிவந்திபுரத்தில் மட்டன் கடை நடத்துபவர் மாயாண்டி. அவரது சகோதரர்களான செல்லப்பா, மாரியப்பன் உள்ளிட்டோர் மற்றும் இவர்களிடம் 2 பேர் விசுவாசமாகப் பல வருடங்களாகப் பணியிலிருப்பவர்கள். இந்த ஐந்து பேரும் மட்டன் கடை சகோதரர்கள் என்று அந்தப் பகுதியில் பிரபலமானவர்கள். இவர்களின் நண்பர் ஒருவர் ஒரு பெண்ணைக் காதலித்திருக்கிறார். சூழல் காரணமாக அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணமாகியிருக்கிறது. தன் மனைவியின் முன்னாள் காதலனிடம் வந்த அவளின் கணவர், ‘தனது மனைவியின் படங்கள் உன் செல்போனில் இருக்கு கொடு’ என்று மிரட்டியவரிடம், ‘அப்படி நான் படமே எடுக்கவே இல்ல’ என்று சொன்னதும் அவரை அடித்து உதைத்ததுமில்லாமல் மண்டையை உடைத்து வலுக்கட்டாயமாக அவரின் செல்லைப் பறித்துச் சென்றிருக்கிறார்.
தனக்கு ஏற்பட்ட இந்தக் கதியை தன் நண்பர்களான மட்டன் கடை சகோதரர்களிடம், ‘நண்பா என்னய இப்படி பண்ணிட்டாங்க’ என்று கூறி அழுதிருக்கிறார் அந்த மாஜி காதலன். இதையடுத்து அந்த நபரிடம் சென்ற மட்டன் கடை சகோதார்கள், ‘அது விலை உயர்ந்த செல், அதைக் கொடுத்து விடுமாறு’ கேட்டவர்களிடம் மறுத்ததுமில்லாமல் அவர்களை மிரட்டியிருக்கிறார். அவர்களை மேலும் பயமுறுத்த தூத்துக்குடியிலிருந்து கூலிப்படையைச் சேர்ந்த சிலரையும் வரவழைத்திருக்கிறார். வந்த கூலிப்படையினர், மட்டன் கடை சகோதரர்களின் வீடு, கடை அடுத்து அவர்களையும் ஆயுதங்களுடன் ஃபாலோ செய்திருக்கின்றனர். தவிர கூலிப்படையினர் அவர்களின் தெருக்களில் ஆயுதங்களை வெளிப்படையாகவே காட்டிக் கொண்டு ரவுண்டடித்திருக்கிறார்கள்.
இதைக் கண்டு சந்தேகப்பட்ட மட்டன் கடை மாயாண்டி சகோதரர்கள், விபரீதம் நடக்கும் முன்பு அவர்களைப் போலீசில் பிடித்துக் கொடுத்து விட வேண்டுமென்ற திட்டத்தில் அவர்களை விரட்டியிருக்கிறார்கள். கூலிப்படையும் சிக்காமல் சிதறி ஒட, அவர்களில் மூன்று பேரைப் பிடித்த மட்டன் கடை சகோதரர்கள் நடந்தவற்றையும் அவர்களைப் பிடித்திருப்பதையும் தெரிவித்தவர்கள், உடனே வந்து அவர்களைக் கொண்டு செல்லுமாறு போலீசுக்குப் ஃபோன் மூலம் புகாராகத் தகவல் கொடுத்தவர்கள் அதை ரெக்கார்டு செய்திருக்கிறார்கள். ஸ்பாட்டுக்கு வந்த போலீசாரும் முறையாக விசாரிக்காமல், கேங்க் வார் போல என்ற கோணத்தில் பிடிபட்ட மூன்று கூலிப்படையினருடன் புகார் செய்த மட்டன் கடை சகோதார்கள் 5 பேர் என 8 பேரையும் கல்லிடைக்குறிச்சி ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
தகவல் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங்கிற்குத் தெரியப்படுத்திய அடுத்தகணம் ஸ்டேஷன் வந்திருக்கிறார். முறையாக அவர்களிடம் நடந்தவற்றை விசாரிக்காமல், அந்த எட்டு பேரையும் அங்குள்ள ஓர் அறைக்குப் போகச் சொன்னவர், அவர்களின் உடைகளைக் களைந்து விட்டு உள்ளாடை உடன் இருக்கும்போது மிரட்டியிருக்கிறார். தொடர்ந்து தானும் மற்றொரு அறையில் தன் உடைகளை மாற்றி விட்டு, உள்ளாடை உடன் இருந்த அந்த எட்டு பேரில் ஒருவரைப் பெயர் சொல்லி அழைத்திருக்கிறார். உள்ளாடையோடு வந்த மட்டன் கடை சகோதரர்களில் ஒருவரான அவரை, இரண்டு போலீசார் அவரின் கைகளைத் திமிறவிடாமல் பிடித்துக் கொண்டதுடன் அவரின் கால்களையும் மிதித்துக் கொண்டனர். நம்மை என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியாமலேயே அவர் பீதியில் மிரண்டு போக, வாய ஈ காட்டுறான்னு அவரின் வாயைப் பலவந்தமாகத் திறந்த ஏ.எஸ்.பி. தன்னிடமிருந்த மூன்று கனமான கூறிய கற்களில் ஒன்றை அவரின் வாயில் திணித்து பாதி உள்ளே போக, மீதி வெளியே இருக்கும்படி வைத்தவர் அழுத்திக் கடிக்கும்படி புட்டத்தில் லத்தியால் அடித்திருக்கிறார். வலி தாங்காத அவரோ கதற முடியாமல் வாயில் அடைக்கப்பட்ட கல்லை அழுத்திக் கடிக்க, தோள்பட்டையிலும் தலையிலும் அடி விழுந்திருக்கிறது. இந்த வேதனையிலும் கதறிய அவரின் வாயிலிருந்து அழுத்திய கல்லின் விளைவாய் ரத்தம் கொப்பளித்திருக்கிறது. அதன் பிறகே கட்டிங் பிளேயர் கொண்டு ஆடிப்போயிருந்த அவரின் பற்களைப் பிடுங்கியிருக்கிறார் ஏ.எஸ்.பி., இதனிடையே மட்டன் கடை சகோதரர்களின் மூத்தவர் மாயாண்டி, ஏ.எஸ்.பியிடம்... ‘ஐயா எந் தம்பி மாரியப்பனுக்கு கல்யாணமாகி ஒரு மாசம் தான் ஆச்சுய்யா. விட்டுறுங்கய்யா’ என்று கதறியிருக்கிறார். அவரை அழைத்த ஏ.எஸ்.பி. ‘ஓ... யு ஆர் மேரிட் என்று குதர்க்கமாகச் சொன்னவர், மாரியப்பனின் ஜட்டிக்குள் தன் கையை விட்டு அவரது பிறப்பு உறுப்பை நசுக்கியதில் அது கலங்கியிருக்கிறது. வலி தாங்கமாட்டாத அவரோ ஓலமிட்டபடி தரையில் விழுந்து புரண்டிருக்கிறார். இப்படி மட்டன் கடை சகோதரர்களான அண்ணன் கண் முன்னே தம்பியையும், தம்பி கண் முன்னே அண்ணனையும் உட்பட சிக்கிய கூலிப் படையினர் என்று 8 பேரின் பற்களைக் கட் பண்ணி எடுத்திருக்கிறார் ஏ.எஸ்.பி.
ஈவு இரக்கம், மனிதாபிமானம் என்றால் என்ன ரேட் என்று கேட்கும் ஏ.எஸ்.பி., குடும்பப் பிரச்சனையால் சிவந்திபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண், தன் கணவர் வேதநாராயணனின் மீது புகார் கொடுக்க, விசாரணைக்காக ஏ.எஸ்.பி. பல்வீர் சிங்கின் முன்பு ஆஜரான வேதநாராணயனின் பற்களையும் தன் ஃபார்முலாப்படி கட் பண்ணி எடுத்தவர், கட்டிங் பிளேயரால் அவரைத் தாக்கியுமிருக்கிறார். சம்பந்தப்பட்டவர் பெரிய அதிகாரி என்பதால் காவல்துறைக்குப் பயந்து வெளியே சொல்லாமல் மனதுக்குள்ளேயே புழுங்கியிருக்கிறார்கள். இதே கொடூரத்தை ஒரு வாலிபரிடம் காட்டிய ஏ.எஸ்.பி. அவரை கடுமையாகத் தாக்கியிருக்கிறார். அதில் அவரது முதுகுத் தண்டுவடம் பாதிக்க, இந்த சம்பவம் எஸ்.பி. தனிப் பிரிவு காவலர் மூலம் மாவட்ட எஸ்.பி. சரவணனுக்குப் போக, நேர்மையான அவர் ஏ.எஸ்.பி.பல்வீர் சிங்கை உடனே வரவழைத்து அவரைக் கடுமையாகக் கண்டித்தும் எச்சரிக்கை செய்தும் அனுப்பியிருக்கிறார்.
எவர் என்றாலும் இப்படி கடு கடுப்பைக் காட்டும் ஏ.எஸ்.பி. வனத்துறை அதிகாரியாகப் பணியிலிருக்கும் தன் மனைவியிடமும் பிரச்சனை பண்ணி அவரையும் தாக்கியதுண்டு என்று போலீஸ் தரப்பிலேயே பேச்சு ஓடுகிறது. இத்தனைக்குப் பிறகும் வழக்கில் சிக்குபவர்களிடம் ஏ.எஸ்.பி. கொடூரமாகப் பற்களைப் பிடுங்கிய விவகாரம் லைம் லைட்டிற்கு வந்து அதிர்வலைகளைக் கிளப்பி விஸ்வரூபமெடுக்க, புகாரின் பேரில் சப் கலெக்டர் முகம்மது சபீர் ஆலம் விசாரணை நடத்தும்படி உத்தரவானதும் பாதிக்கப்பட்டவர்கள், புகார் கொடுத்தவர்கள் விசாரணைக்கு வந்தால் உண்மை வெளியேறினால் நிலைமைகள் பயங்கரமாகிவிடும் என்ற பரிதவிப்பில், சம்பந்தப்பட்ட சப்டிவிஷன் போலீசார் சிலரோ அவர்களை மிரட்டியும் கூல் செய்தும் விசாரணைக்கு வர விடாமல் தடுத்திருக்கிறார்கள். அதே சமயம் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங்கும் டி.ஜி.பி.யின் உத்தரவால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
குறிப்பாக புகார் கொடுத்த சுபாஷ், லட்சுமி சங்கர், வெங்கடேஷ் மூவருக்கும் தலா 30 ஆயிரம் கொடுக்கப்பட்டு அவர்களின் வாய் அடைக்கப்பட்டதுடன் விசாரணைக்கு வரவிடாமல் செய்திருக்கிறார்களாம். தவிர, பாதிக்கப்பட்ட சூர்யா என்பவரை முகமூடி போட்டபடி அவர் எவர் கண்ணிலும் படாமலிருக்கப் பொத்திப் பொத்திப் பாதுகாத்து அழைத்து வந்த போலீசார், தனக்கு அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று சப் கலெக்டரிடம் சொல்ல வைக்கப்பட்டுள்ளதாம். மேலும் விசாரிக்கையில், ஏ.எஸ்.பி.பல்வீர்சிங் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேந்தவர். ஆல் இண்டியா கொள்ளைக் கும்பல் பவாரியாவின் பக்கத்து ஏரியாவைச் சேர்ந்தவர் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் என்றும் சொல்கிறார்கள். “நாங்க எந்த குற்றத்திலயும் ஈடுபடல. யாரையும் தாக்கல. எங்களைத் தாக்க வந்த கூலிப்படையைப் புடுச்சி போலீஸ்ட்ட ஒப்படைச்சோம். அதுக்கான ஆதாரம் எங்ககிட்ட இருக்கு. எந் தம்பி மாரியப்பனின் பிறப்புறுப்பை ஏ.எஸ்.பி. சேதப்படுத்தியதால அவன் நடக்க முடியாமயிருக்காம்யா. தப்பே செய்யாத எங்களுக்கு இந்த தண்டனைக் கொடுமையா” எனத் தேம்பினார் மட்டன் கடை செல்லப்பா.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்கப் போராடும் நேதாஜி சுபாஷ் சேனையின் தலைவரான மகாராஜனோ, "ஏ.எஸ்.பி. நிலவரம் தெரியாமல் கர்ண கொடூரமாகவும், சைக்கோவாகவும் நடந்து கொள்கிறார். அப்படிப்பட்டவர் போலீஸ் வேலைக்கு அன் ஃபிட். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் வெளியே தெரியாமலிருக்கிறார்கள். அரசு தலையிட்டு விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் நிவாரணமும் கிடைக்க வழிவகை செய்வதுடன் ஏ.எஸ்.பி.பல்வீர் சிங் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார் அழுத்தமாக.
1982ல் பீகார் மாநிலம் பாகல்பூர் சிறையில் கைதிகளின் கண்களைக் குருடாக்கிய சம்பவம் தேசத்தையே கொந்தளிக்க வைத்தது. மேலும் இன்னொரு சாத்தான்குளம் உருவாகி விடக்கூடாது.