கடந்த சில தினங்களாக சமர் கார் ஸ்பா என்ற நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில், அதன் உரிமையாளா் வினோத் தமிழீழத்திற்காகப் போராடிய பிரபாகரனையும், அவருடைய கொள்கையையும் குறித்து தவறுதலாக குறிப்பிட்டு பதிவுகள் வெளியாகியது. இதைப் பார்த்து அதற்குப் பதில் அளித்த சாட்டை துரைமுருகன், மீண்டும் தன்னுடைய பங்கிற்கு பிரபாகரனை தவறாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்து பல பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
ஆனால் இருவருக்கும் இடையே கருத்துமோதல்கள் முற்றிய நிலையில், சாட்டை துரைமுருகன், நாம் தமிழா் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநில தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் சந்தோஷ் என்ற மகிழன், மாநில கொள்கை பரப்புரையாளா் திருச்சி சரவணன் உள்ளிட்ட 4 பேர் நேற்று (11.06.2021) காலை 11 மணியளவில் சமர் கார் ஸ்பா என்ற நிறுவனத்திற்குச் சென்று பிரபாகரனை தவறுதலாக பேசிய வினோத்தை நேரில் சந்தித்து பேசியேதோடு, காவல்துறையினர் முன்னிலையில் தவறுதலாக பேசிய வினோத்தை மறுப்பு காணொளி மூலம் மன்னிப்பு கேட்கவைத்துள்ளனா்.
இந்நிலையில், இரவு 7 மணியளவில் கே.கே. நகர் காவல்துறையினர் சாட்டை துரைமுருகன் மற்றும் அவருடன் சென்று சமர் கார் ஸ்பாவிற்கு சென்று மிரட்டல் விடுத்த 4 பேர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவுசெய்து கைது செய்தது. அவர்கள் மீது பிரிவு 147 – கலகம் செய்யுதல், பிரிவு 148 – கலகம் செய்யும்போது பயங்கரமான ஆயுதங்களை வைத்திருந்தது. பிரிவு 447 – அத்துமீறி நுழைதல், 294(பி) - பிறருக்குத் தொல்லை தரும் வகையில், பொது இடத்தில் ஆபாச செயலைப் புரிதல், 506 (1) - குற்றம் கருதி மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட நான்கு பேருக்குத் திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனா்.
நேற்று பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ஆய்வுசெய்ய திருச்சி மாவட்டத்திற்கு வருகைதந்த தமிழ்நாடு முதல்வர் தன்னுடைய ஆய்வுப் பணிகளை முடித்து மீண்டும் சேலம் மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்ற நிலையில், இந்தக் கைது நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார். இது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடைபெற்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.