விழுப்புரம் மாவட்டம், பொய்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சித்ரா. இவர், விழுப்புரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ‘கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரைச் சேர்ந்த பார்த்தசாரதி, பாலாஜி, பரணிதரன், இளங்கோவன் ஆகிய நால்வரும் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் ரியல் எஸ்டேட் ஆரம்பித்து அதன் மூலம் வீட்டு மனை விற்பனை செய்து வந்தனர்.
இப்பகுதியில் வீட்டுமனை தருவதாக கூறி 500 நபர்களிடம் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை வசூல் செய்தனர். ஆனால், அவர்கள் கூறியபடி வீட்டு மனையை பத்திரப்பதிவு செய்து தரவில்லை. அதற்காக கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டும்; கொடுக்காமல் எங்களை மிரட்டுகின்றனர். எனவே, மோசடி நபர்கள் நால்வர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு எங்களுக்கு பணம் அல்லது வீட்டுமனை திரும்ப கிடைக்க ஆவன செய்ய வேண்டும்’ என்று புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் மேற்படி நால்வரும் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நாலு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து பரணிதரன், பாலாஜி, இளங்கோவன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட மூவரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், பார்த்தசாரதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.