செம்புக் கட்டியைக் கொடுத்து தங்கக் கட்டி என ஏமாற்றிய தம்பதிகள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஜாசர் ஹூக்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஜூல்விர்கான். இவருடைய மனைவி பில்கிஸ்தாரா. இவர்கள் சேலம் செவ்வாய்பேட்டை மாதவராயன் தெருவில் சொந்தமாக நகைக்கடை நடத்தி வருகின்றனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு, இவருடைய கடைக்கு கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஷேண்டோ வர்கீஸ் (40) உள்ளிட்ட 3 பேர் வந்தனர். அவர்கள் தங்களிடம் உள்ள ஒரு கிலோ தங்க நகைகளைக் கொடுத்து, அதற்கு பதிலாக ஒரு கிலோ தங்கக் கட்டி வேண்டும் என்று கூறி உள்ளனர். அதற்கு ஒப்புக்கொண்ட ஜூல்விர்கான் நகைகளைப் பெற்றுக்கொண்டு, தங்கக் கட்டி இருப்பதாகக் கூறி ஒரு பையை அவர்களிடம் கொடுத்துள்ளார். அதை அருகில் உள்ள தர பரிசோதனை கூடத்துக்கு எடுத்துச் சென்ற கேரள வாடிக்கையாளர்கள், அங்கு பரிசோதனை செய்துள்ளனர். அப்போதுதான் ஜூல்விர் கான் கொடுத்தது செம்புக் கட்டி என்று தெரிய வந்தது.
இதுகுறித்து அவர்கள் ஜூல்விர்கானிடம் கேட்டபோது இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் ஜூல்விர்கானும் அவருடைய மனைவியும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஜூல்விர்கான் மற்றும் அவருடைய மனைவி பில்கிஸ்தாரா ஆகிய இருவரும் கோவையில் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக அவர்களுடைய நண்பர் சக்திவேல் என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து முக்கால் கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.