Skip to main content

'விண்ணை பிளந்த அரோகரா கோஷம்'- தொடங்கியது பழனி தேரோட்டம்...!!

Published on 08/02/2020 | Edited on 08/02/2020

 

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தமிழ் கடவுளான முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

இந்த விழாவின் நிகழ்ச்சியான தைப்பூச வழிபாடு இன்று நடைபெற்றது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கடந்த சில நாட்களாகவே மதுரை, ராமநாதபுரம், தேனி, காரைக்குடி, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, மேலூர், நத்தம், கம்பம், வத்தலகுண்டு உள்பட பல பகுதியிலிருந்து முருக பக்தர்கள் பாதயாத்திரையாக காவடி எடுத்தும், அழகு குத்தியும் ஆடிப்பாடி பெருந்திரளான கோவிலுக்கு வந்தனர்.

தைப்பூசத் திருவிழாவையொட்டி முருக பக்தர்கள் முருகனை தரிசிப்பதற்காக கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கூட்ட நெரிசலை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நகரில் திரும்பிய திசையெங்கும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்தது. பழனி மலை அடிவாரப் பகுதி முதல்  திருஆவினன்குடி கோவில் வரை பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் இடைவெளி முழுவதும் பக்தர்கள் தலையாக காட்சியளித்தது. பக்தர்கள் வசதிக்காக அங்கங்கே  அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டன.

பழனி நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. அதோடு கூட்ட நெரிசலை தவிர்க்க ஒட்டன்சத்திரம் சாலையில் ஒரு வழிப்பாதை அமுல்படுத்தப்பட்டு இருந்தது. அது போல் திண்டுக்கல் மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதுபோல் மதுரை கோயமுத்தூருக்கு பழனிக்கு இடையே தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் விடபட்டுருந்தது. பக்தர்கள் வசதிக்காக பழனி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த தைப்பூசத் விழாவையொட்டி இன்று அதிகாலை முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் துணியால் வாகனத்தில் எழுந்தருளி சண்முக நதியில் தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதோடு பக்தர்கள் சண்முக நதியில் நீராடி சாமி தரிசனம் செய்தனர். இதனால் சண்முக நதிகளும் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தைப்பூசத் திரு விழாவையொட்டி மற்றொரு நிகழ்ச்சியான தேரோட்டம் தற்பொழுது தொடங்கியுள்ளது. பல்லாயிரக்கணக்கான பத்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர். கூடியிருந்த மக்கள் அரோகரா என எழுப்பிய கோஷம் விண்ணை பிளக்க முத்துக்குமாரசாமி தெய்வானையுடன் பவனி வந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்