தூத்துக்குடி மாவட்டம், சாத்தன்குளம் தந்தை ஜெயராஜ்- மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் முதலில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் (எஸ்.ஐ.க்கள்) பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமைக் காவலர்கள் முத்துராஜ், முருகன் உள்ளிட்ட ஐந்து போலீசார் மதுரை மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ. விசாரணைக்குச் செல்ல ஐந்து போலீசாரும் மறுத்துவிட்டனர். நீதிபதி தனித்தனியாக விருப்பம் கேட்ட நிலையில் ஐந்து பேரும் மறுத்துவிட்டனர். இதற்கு சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்து, ஐந்து போலீசாரையும் காவலில் எடுத்து விசாரிப்பது முக்கியமானது என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட ஐந்து போலீசாரை ஜூலை 16 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தார். மேலும், ஜூலை 16- ஆம் தேதி மாலை 05.30 மணிக்கு மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
சி.பி.ஐ. ஐந்து நாள் அனுமதி கேட்ட நிலையில், மதுரை நீதிமன்றம் மூன்று நாள் மட்டுமே அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.