மனிதர்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொடர்ந்து தனது எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வைரஸ் தடுப்பு போரில் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை மிகவும் கவனமாகச் செயல்பட்டு வருகிறது.
குறிப்பாகத் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் வந்து தங்குவதும், சில நாட்கள் அவர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இருப்பதும், தொடர்ந்து கிரிவலப்பாதையில் உள்ள பல்வேறு ஆசிரமங்களில் அவர்கள் தங்கி செல்வதும் வழக்கம். இந்த கரோனா வைரஸ் பீதி வந்த பிறகு திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி மாவட்ட காவலர்களைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் உள்ள வெளிநாட்டவர்கள் யார் யார் இருக்கிறார்கள் என கணக்கெடுக்க கூறியுள்ளார். அதன் அடிப்படையில் திருவண்ணாமலையில் மட்டும் சுமார் 300 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளார்கள். அவர்களை கண்டறிந்து அவர்களின் நாட்டுக்கே செல்வதற்கு ஏற்பாடு செய்து இந்திய வெளியுறவுத்துறை மூலம் அனுப்பி வைத்தார்.
தற்போது திருவண்ணாமலை நகரத்தில் வெளிநாட்டு மனிதர்கள் யாரும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலும் திருவண்ணாமலையில் உள்ள இளைஞர்கள் சிலர் ஊரை சுற்றி வருவதாக போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே இதற்கென ஒரு தனி குழு ஈகீள் டீம் என்ற அந்த டீம் மாவட்டம் முழுக்க கிராமப்புற பகுதிகளில் சுற்றிவந்து சம்பந்தம் இல்லாத நபர்களை கண்டறிந்து கைது செய்து வருகிறது. இந்தநிலையில் இன்று புதிதாக ஒரு டீமை மாவட்ட எஸ்பி சிபிசக்ரவர்த்தி உருவாக்கியுள்ளார். அதனடிப்படையில் கார்களில் வரும் நபர்கள் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள் என எல்லோரையும் கண்டறிந்து அவர்கள் சம்பந்தமில்லாமல் வருகிறார்கள் என ஆராய்ந்து அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து வாகனத்தையும் பறிமுதல் செய்து வருகிறார்கள். அதேபோல் திருவண்ணாமலையில் மளிகைக் கடை, காய்கறி கடைகளை ஏப்ரல் 14-ம் தேதி வரை மூட மாவட்ட நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது. மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யவும், காய்கறிகளைத் தள்ளுவண்டியில் விற்பனை செய்யும் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
திருவண்ணாமலையில் இந்த நடவடிக்கை இருப்பதால் தான் வெளிநாட்டவர் மூலம் இந்த வைரஸ் பரவாமல் இருக்கிறது என்கிறார்கள் மக்கள்.