திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து பொம்மைக்கடை, திண்பண்டக் கடை, வளையல் கடை, பந்துக்கடை, ஜீஸ் கடை என ஏராளமான கடைக்காரர்கள் வந்து சாலையோரங்களில் கடைப்போட்டுள்ளனர். இவர்களிடம் நகராட்சி ஒப்பந்ததாரர், கோயில் ஒப்பந்ததாரர் எனச்சொல்லி ரூ.50 முதல் ரூ.100 வரை கடந்தாண்டு சிலர் பணம் வசூலித்தனர்.அதேபோல் பெரியத்தேர் முதல் மகாதீபம் வரை செங்கம் சாலை சந்தை மைதானத்தில் கல்நடை சந்தை நடக்கிறது. இங்கும் வந்து நான்கு சக்கர வாகனத்திற்கு 100 ரூபாய், மாடுகளுக்கு 200 ரூபாய், ஆடுக்கு 50 ரூபாய், குதிரைக்கு 150 ரூபாய் என வசூலித்தனர்.
மேலும் நகரத்துக்கு வெளியே 9 சாலைகளில் அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் வாகன நிறுத்தும்மிடங்களில் சிலர் நகராட்சி கட்டணம் எனச்சொல்லி வசூலிப்பது வாடிக்கை. திருவிழா காலங்களில் இப்படிப்பட்ட கட்டண வசூலிப்பை தடைசெய்துள்ளது நகராட்சியும், மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும். அப்படியிருந்தும் மறைமுகமாக அடியாட்களை வைத்து வசூலித்தனர். இதுப்பற்றிய புகார் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்துக்கும், காவல்துறைக்கும் சென்றதன் அடிப்படையில் இந்தாண்டு புதியதாக ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த எண் 7695800650. இந்த எண்ணில் அழைத்து புகார் தெரிவிக்கலாம். அல்லது இந்த எண் வாட்ஸ்அப் எண்ணாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணில் புகைப்படம் எடுத்தும் பதிவிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, ஆட்டோக்கள் அதீதமாக கட்டணம வசூலிக்கிறது என்கிற குற்றச்சாட்டும் எழுப்பப்படுகிறது. இதனால் கடந்தாண்டை போல் ரேட் பிக்ஸ் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2.5 கிலோ மீட்டருக்கு தலைக்கு 20 ரூபாய், 2.5 கி.மீ தாண்டி பயணம் செய்தால் கிலோ மீட்டருக்கு 30 ரூபாய் என நிர்ணயிருக்கப்பட்டுள்ளது. இவர்கள் கூடுதலாக கட்டணம் கேட்டால் ஆட்டோவில் உள்ள பதிவு எண், வாகன ஓட்டுநர் பதிவு ஒட்டப்பட்டுயிருக்கும், அதனை போட்டோ எடுத்து புகார் எண்ணுக்கு அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது.