திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், நவம்பர் 29 -ஆம் தேதி காலை, பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகாதீபமும் ஏற்றப்படவுள்ளது. இந்த நிகழ்வில், பொதுமக்கள் கலந்துகொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், தீபத் திருவிழாவிற்கு 2,700 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள், கோவிலில் 3 அடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது எனத் திருவண்ணாமலை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் கூறினார்.
நவம்பர் 28 -ஆம் தேதி காலை முதல் அண்ணாமலையார் கோவிலின் 4 கோபுரப் பகுதிகள், மாடவீதி, நகரம், நகர எல்லைகள், மாவட்ட எல்லைகள் எனத் திரும்பிய பக்கமெல்லாம் போலீஸாகவே உள்ளனர். திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி என அருகில் உள்ள மாவட்டங்களின் மாவட்ட எஸ்.பி.கள், டி.எஸ்.பி.கள், போலீஸார் என ஆயிரக்கணக்கில் வந்து குவிந்துள்ளனர். கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதியில்லை. மலையேறவும் பக்தர்களுக்கு அனுமதியில்லை. கிரிவலத்துக்கு அனுமதியில்லை. சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பின், எதனால் இவ்வளவு போலீஸாரை குவித்துள்ளார்கள் என்கிற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
நம்மிடையே பேசிய திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவர், கடந்தாண்டு 13 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர். இந்தாண்டு 6,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுப்படுத்தப்படுகின்றனர் என்றார்.
மகா தீபத்தன்று கோவிலுக்குள் தேவைக்கு அதிகமான அளவில் காவல்துறை குவிக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்தாண்டு, 3 ஆயிரம் பேர் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என அதிகாரப்பூர்வமற்ற முறையில் மாவட்ட நிர்வாகம் கூறிவரும் நிலையில், கோவிலுக்குள் 3 அடுக்குப் பாதுகாப்பு எதற்கு என்கிற கேள்வி எழுந்துள்ளது.