சேலத்தில் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மணக்காடு குள்ளர் தெருவைச் சேர்ந்த ராஜூ மகன் ரகுபதி (26). கடந்த ஜூன் 11ம் தேதியன்று அழகாபுரம் காட்டூரைச் சேர்ந்த கணேசன் என்பவரிடம் கத்தி முனையில் பணம், செல்போன், கைக்கடிகாரம் பறித்த வழக்கில் ரகுபதியை அழகாபுரம் காவல்துறையினர் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
கடந்த மே மாதம் 4ம் தேதி, ரகுபதியும் அவருடைய கூட்டாளிகளும் சேர்ந்து புதிய பேருந்து நிலையம் அருகே ஒரு அழகு நிலையத்திற்குள் புகுந்து பெண்களிடம் அத்துமீறலுடன் நடந்து கொண்டதோடு, அவர்களிடம் இருந்த 15000 ரூபாய் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடினார். அதேநாளில், அஸ்தம்பட்டி காவல் சரகத்திற்குள் ஒருவரிடம் கத்திமுனையில் 3 பவுன் சங்கிலியை பறித்துச்சென்றனர். இச்சம்பவத்திற்கு அடுத்த நாளும், அழகாபுரத்தில் உள்ள ஒரு அழகு நிலையத்திற்குள் புகுந்து அங்கும் பெண்களிடம் 10000 ரூபாயை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். அங்கிருந்த செல்போன், ஏசி இன்வெர்ட்டர் ஆகிய பொருள்களையும் தூக்கிச் சென்றுள்ளான்.
தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் ரகுபதியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய அழகாபுரம் காவல் ஆய்வாளர், மாநகர காவல்துணை ஆணையர் தங்கதுரை ஆகியோர் மாநகர காவல்துறை ஆணையருக்கு பரிந்துரை செய்தனர். இதனையடுத்து ஆணையர் செந்தில்குமார் கொள்ளையன் ரகுபதியை குண்டர் சட்டத்தில் கைது சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ரகுபதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை, மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அவரிடம் சார்வு செய்யப்பட்டது.