Skip to main content

''ஒரு ரூமுக்குள் உன்னை உட்கார வைக்க பார்த்தார்கள் ஆனால்...''-கலைஞர் பேசியது பற்றி மனம் திறந்த மு.க.ஸ்டாலின்!

Published on 07/09/2021 | Edited on 07/09/2021

 

சிங்காரச் சென்னை 2.0 மற்றும் தூய்மை பணிகளுக்கான 36.52 கோடி ரூபாய் மதிப்பில் 1,684 பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள் 15 காம்பாக்டர் இயந்திரங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை ரிப்பன் பில்டிங்கில் இன்று நடைபெற்றது. அதேபோல் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

 

அப்பொழுது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''இந்த ரிப்பன் கட்டிடத்திற்குள் நுழையும் போது என்னுடைய நிறைவு 1996 க்கு போய்விட்டது. 1996 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற தேர்தலில் மேயராக என்னைத்  தேர்ந்தெடுத்து பணியாற்றுவதற்குச் சென்னை மாநகர மக்கள் எனக்கு உத்தரவிட்டார்கள். அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு பணியாற்றினேன். மேயர் என்றால் ஒரு பெரிய அங்கி, நூறு பவுன் செயின், செவர்லெட் கார் இதுதான் அவர்களின் பணியாக இருந்தது.  அந்த அங்கியைப் போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளுக்குப் போவது, விழாக்களுக்குப் போவது, வெளிமாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்வது, வெளிநாடுகளுக்குப் போவது. இதுதான் மேயரின் வேலையாக இருந்தது. அதை மாற்றி மக்கள் பணியாற்றுவதுதான் மேயருடைய வேலை என்பதை  மேயராக பொறுப்பேற்ற நான் நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் என்னுடைய கடமையைச் செய்தேன்.

 

இந்த சாலை வழியாகப் போகும்போதெல்லாம் ரிப்பன் பில்டிங்கை பார்த்துவிட்டுத் தான் போவேன். இந்த ரிப்பன் பில்டிங்கை பார்க்கும் போதெல்லாம் நான் 96ல் மேயராக வெற்றி பெற்றது நினைவுக்கு வரும். அப்பொழுது பொறுப்பேற்பதற்காக இதே ரிப்பன் பில்டிங்கில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினோம். அதற்கு அழைப்பிதழ்கள் தயாராகி, அதைக் கலைஞரிடம் கொண்டுபோய் கொடுத்தோம். கலைஞர் அந்த அழைப்பிதழை உத்து உத்து பார்த்துக் கொண்டிருந்தார். முதல் பக்கத்தில் கலைஞர் எனக்குப் பொன்னாடை  அணிவிப்பதைப் போன்ற புகைப்படமும் கடைசி பக்கத்தில் ரிப்பன் பில்டிங்கின் புகைப்படமும் இருந்தது. அதைப் பார்த்துக்கொண்டே இருந்தார் கலைஞர். 96ல்  வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பொழுது என்னை அமைச்சராக்க வேண்டும் என்று எல்லாரும் கலைஞரிடம் போய் சொன்னார்கள். ஆனால் கலைஞர் என்னை அமைச்சராக்கவில்லை. நானும் அந்த நேரத்தில் அதை விரும்பவில்லை. ஆனால் நம்முடைய தோழர்கள் போய் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால் கலைஞர் முடியாது முடியாது எனத் தடுத்துவிட்டார், மறுத்துவிட்டார். ஆனால் அதற்குப் பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் நடைபெற்ற மேயர் பொறுப்புக்கான தேர்தலில் நான் போட்டியிட்டு மக்களுடைய வாக்குகளை வாங்கி, மக்கள் வாக்கைப் பெற்ற முதல் மேயராக நான் அன்றைக்குப் பொறுப்பேற்றேன். அந்த பில்டிங்கை பார்த்து அப்போது கலைஞர் சொன்னார், எல்லாரும் சேர்ந்து சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு ரூமுக்குள் உன்னை உட்கார வைக்கப் பார்த்தார்கள். ஆனால் நான் உன்னை எவ்வளவு பெரிய பில்டிங்கில் உட்கார வைத்திருக்கிறேன் என்று கலைஞர் பெருமையாகச் சொன்னார்.

 

இது வரலாற்றுச் சிறப்புமிக்க ரிப்பன் மாளிகை கட்டிடம் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். சட்டமன்ற கூட்டத்தொடர் செப்டம்பர் 13ஆம் தேதி நிறைவடைகிறது. எப்பொழுதுமே சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் பொழுது எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள நான் ஒத்துக்கொள்வதில்லை. ஏனெனில் சட்டமன்ற பணிகளைத் தொடர வேண்டும் என்பதற்காக அமைச்சராக இருந்த போதிலும் சரி இப்போதும் சரி அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அமைச்சர் நேரு  சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் இந்த சமயத்திலேயே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார். வரவேண்டியது கொடியசைத்து விட்டுப் போக வேண்டியது என்று சொல்லித் தான் அழைத்து வந்தார்கள். ஆனால் இங்கு வந்து பார்த்த பொழுது தான் தெரிகிறது இங்கு ஒரு நிகழ்ச்சியையே  ஏற்பாடு செய்து, மேடை போட்டு என்னைப் பேசவும் வைத்திருக்கிறார். எப்பொழுதுமே நேரு ரொம்ப ஸ்பீடா இருப்பார். அதனால்தான் நான் இருந்த நகராட்சி நிர்வாக பொறுப்பை அவரிடம் கொடுத்து இருக்கிறோம்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்