தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் கடந்த 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திக் காட்டினார். மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டதோடு விஜய் தன்னுடைய கொள்கை மற்றும் அரசியல் எதிரிகள் யார் என்பது குறித்துப் பேசி இருந்தார்.விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல்வேறு தலைவர்களும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.
'விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு விசிக உள்ளிட்ட சில கூட்டணிக் கட்சிகள் வெளியேற வாய்ப்பு இருக்கும் என நிறையக் கருத்துக்கள் பேசப்பட்டு வருகிறது. ஆனால் நேற்று திருமாவளவன் செய்திகளைச் சந்தித்தபோது திட்டவட்டமாக சொல்லி இருக்கிறார் திமுக கூட்டணியில் தான் விசிக தொடரும் என சொல்லியிருக்கிறார். இதுபோன்ற எதிர்ப்பு விமர்சனங்களை வைத்தவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?' என செய்தியாளர் ஒரு கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த கனிமொழி, ''விசிகவின் தலைவரே ஒரு தெளிவான தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார். இதற்கு மேல் நான் சொல்வதற்கு ஒன்றும் கிடையாது. எங்களுடைய தலைவர் சொல்வதைப்போல திமுக கூட்டணி என்பது கொள்கையில் உருவான கூட்டணி. இதற்கு ஒரே லட்சியம் இந்த நாட்டின் இறையாண்மை, நாட்டினுடைய மதச்சார்பின்மையை பாதுகாப்பது தான். அதனால் இந்தியா கூட்டணியை மாற்றி அமைப்பது என்பது கேள்வியே இல்லை'' என்றார்.
'விஜய்யினுடைய அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்' என்ற கேள்விக்கு, ''ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அதனால் அதைப் பற்றி நான் கருத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை'' என்றார்.
'நல்லாட்சி வழங்கியதால் தான் அதிமுகவை பற்றி விஜய் விமர்சனம் வைக்கவில்லை என அதிமுகவினர் சொல்கின்றனரே' என்ற கேள்விக்கு, '' நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது என்பது ஒரு நல்ல நகைச்சுவை தான். அதனால் அதைப் பற்றி நான் சொல்வதற்கு இல்லை. எங்களுடைய அமைப்புச் செயலாளர் சொன்னதை போல பழுத்த மரம் தான் கல்லடிப்படும். சிறப்பாக செய்கின்ற ஆட்சியை தான் விமர்சனம் செய்வார்கள்'' என்றார்.