தனது பெயரைப் பயன்படுத்தி கூட்டங்கள் நடத்தத் தந்தை சந்திரசேகர், தாய் சோபனா உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்குத் தடைவிதிக்க வேண்டும் என நடிகர் விஜய் தரப்பு சென்னை உரிமையியல் நீதிமன்றம் வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் 'விஜய் மக்கள் இயக்கம்' கலைக்கப்பட்டுவிட்டதாக நேற்று விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த பதில் மனுவில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தைக் கலைக்கவிருப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும், எனவே விஜய் மக்கள் இயக்கம் தற்பொழுது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியது. இந்த வழக்கு விசாரணை வரும் அக்.29 ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இந்த தகவல் வெளியான சிறிது நேரத்திலேயே, எஸ்.ஏ.சந்திரசேகர் உருவாக்கிய விஜய் மக்கள் இயக்கம் மட்டுமே கலைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய தலைமையில் இயங்கும் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்படவில்லை. தன்னுடைய தலைமையிலான விஜய் மக்கள் இயக்கம் இயங்கும் என விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''விஜய்க்கு எனக்கும் இடையே பிரச்சனை இருப்பது உண்மைதான். அதை இல்லையென்று நான் எப்பொழுதும் மறுக்கமாட்டேன். இன்னைக்கு பிரச்சனை இருப்பது உண்மை. மற்றபடி அவரும் அவரது தாயும், அதாவது விஜயும் என்னுடைய மனைவியும் எப்பொழுதும் போல பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள், பழகிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டுபேருக்கும் இடையே எந்த மனக்கசப்பும் இல்லை. சந்தோஷமாக இருக்கிறார்கள்'' என்றார்.