தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான மானியக் கோரிக்கைகளும், விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.
இதில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த பக்கிரிசாமி மீதான பாலியல் தொந்தரவு வழக்கு குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம்’ கொண்டு வந்தார். இதற்கு முதல்வர் பதில் அளித்தார்.
இந்நிலையில், இ.பி.எஸ். பேசியதை நேரலை செய்யவில்லை என அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து இ.பி.எஸ். சட்டமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “சீரோ ஹவரில் விருத்தாசலத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து நான் பேசினேன். விருத்தாசலம் பகுதியில் உள்ள பள்ளியில் ஆறு வயது சிறுமி படித்து வந்துள்ளார். அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு, அவரை பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார். மேலும், குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து குழந்தை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லியுள்ளனர்.
பின் குழந்தையிடம் பல்வேறு புகைப்படங்களைக் காட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது விருத்தாசலம் 30வது வார்டு கவுன்சிலர் புகைப்படத்தை குழந்தை அடையாளம் காட்டியதைத் தொடர்ந்து காவல்துறையினர், நேற்று இரவு (11 ஆம் தேதி) எட்டு மணிக்கே அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். பெற்றோர்களும் இந்த விவகாரம் குறித்து புகார் அளித்துள்ளனர். ஆனால், உடனடியாக அந்தப் புகாரை ஏற்று எஃப்.ஐ.ஆர். போடவில்லை. ஆனால் இன்று முதல்வர், அவருக்கு தகவல் கிடைத்தவுடனேயே, இந்தக் கொடுங்குற்றத்தில் ஈடுபட்டுள்ள அந்தப் பள்ளியின் உரிமையாளரை கைது செய்துள்ளோம். அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு 8 மணிக்கே குழந்தையின் பெற்றோர் புகார் கொடுத்தும் இன்று காலை 9 மணி வரை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை. திமுக ஆட்சி அமைத்ததிலிருந்தே தொடர்ந்து ஆங்காங்கே பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர். நகர் மன்ற உறுப்பினர் என்பதால் இரவு எட்டு மணி முதல் காலை ஒன்பது மணி வரை கிட்டத்தட்ட 13 மணி நேரம் அந்தக் குற்றவாளி கைது செய்யப்படவில்லை.
இந்தக் குழந்தைக்கு ஏற்பட்ட கொடுமையான செயலை சீரோ ஹவரில் சட்டமன்றத்தில் நான் எழுப்பினேன். நான் பேச எழுந்தவுடனேயே நேரலையை கட் செய்துவிட்டார்கள். நான் பேசியதற்கு முன்பாகவும், பின்பாகவும் நேரலை வருகிறது. இதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.