
நடந்து முடிந்த 16 சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தில் மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறுவது குறித்து பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், ''ஒன்றியம் என்பது தவறான சொல்லல்ல. ஒன்றியம் என்ற சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்துவோம். ஒன்றியம் என்ற சொல்லைப் பார்த்து மிரளத் தேவையில்லை. ஒன்றிய அரசு என்ற சொல்லைக் கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் பயன்படுத்துகிறோம். எனவே அதை ஒரு சமூகக் குற்றமாக பார்க்கக்கூடாது. மாநிலங்கள் ஒன்று சேர்ந்து இருப்பதே ஒன்றியம் என்பதற்குப் பொருள்.
ஒன்றிய அரசு என்ற பதத்தை தற்போதுதான் திமுக பயன்படுத்திவருவதாகவும், முன்னாள் முதல்வர் கலைஞர் அல்லது யாரும் பயன்படுத்தவில்லை என்பது போன்ற தகவல் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. அது தவறான விஷயம். 1957இல் திமுக தேர்தல் அறிக்கையிலேயே ஒன்றிய அரசு என்ற சொல் பயன்படுத்தபட்டுள்ளது'' என விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பது குறித்து தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் விமர்சனம் ஒன்றை வைத்துள்ளார். அதில், ''ஒன்றிய அரசு என அழைப்பதால் தமிழகத்திற்கு ஏதேனும் நன்மை இருக்கிறதா? ஒன்றிய அரசு என்பது பொது மக்களை திசை திருப்பும் முயற்சி. ஒன்றிய அரசு என தமிழக அரசு அழைப்பது பற்றி தேவைப்பட்டால் வழக்குத் தொடரப்படும்'' என தெரிவித்துள்ளார்.