தமிழ்நாட்டில் சுற்றுலாவிற்கு ஒரு புதிய பரிணாமத்தை அளித்து நாட்டின் முன்னோடி சுற்றுலாத் தலமாக மாற்றித் துறையினை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023யை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26.9.2023) வெளியிட்டார்.
இந்நிலையில் தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023இல் வெளியிட்டுள்ள தகவலின் படி, “சென்னை புறநகரில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமெரிக்காவில் உள்ளது போன்று சர்வதேச அளவிலான தீம் பார்க் அமைக்க முடிவெடுத்துள்ளது. இந்தத் திட்டம் தனியார் பங்களிப்புடன் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். இந்த தீம் பார்க்கில் விளையாட்டு அரங்குகள், ராட்சத ராட்டினங்கள், நீர் விளையாட்டுகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறும் வகையில் இந்த தீம் பார்க் அமைக்கப்படவுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் க. மணிவாசன், சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.