பழனியில் பட்டப்பகலில் முதியவர் ஒருவரின் பையைப் பிடுங்கிச் சென்ற சிறுவனை பொதுமக்கள் விரட்டி பிடித்த நிலையில், அந்த சிறுவன் பசியின் காரணமாக திருடியதாகக் கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி ரோட்டில் உள்ள டீக்கடையில் முதியவர் ஒருவர் டீ குடித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக நடந்து வந்த சிறுவன் முதியவரின் கையில் வைத்திருந்த மஞ்சள் பையை பறித்துக் கொண்டு ஓடினான். இதனை அக்கம் பக்கத்திலிருந்து கண்ட மக்கள் அந்த சிறுவனைத் துரத்திப் பிடித்தனர். மக்களிடம் சிக்கிய பின்பு கதறி அழுத அந்த சிறுவன் பசித்ததால் பையைத் திருடியதாக தெரிவித்தான். மேலும் அந்த பையில் பழங்கள் இருந்தால் அதை சாப்பிட்டு விட்டு பையைத் தூக்கி எறிந்ததாக தெரிவித்துள்ளான். உண்மையாகவே பசிக்காக திருடியதை உணர்ந்த அந்தப்பகுதி மக்கள் அந்த சிறுவனுக்கு தேநீர் வாங்கிக் கொடுத்தனர். அப்பொழுது பசித்தால் கேட்டுவாங்கிச் சாப்பிடலாமே ஏன் திருடினாய் என அறிவுரை கூறினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரம் என்பது தெரியவந்தது. இதற்குமுன் அந்த சிறுவன் மீது எந்த வழக்கும் இல்லாததும் தெரியவந்தது. அதனையடுத்து விக்கிரமனுக்கு உணவு வாங்கிக் கொடுத்த போலீசார் சேலத்திற்குச் செல்வதற்கு பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.