தாரமங்கலம் கோயில் தேர்த்திருவிழாவின்போது இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, வருவாய்த்துறை கோட்டாட்சியர் தலைமையில் புதன்கிழமை (பிப். 12) அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் மிகப்பழமையான கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் நான்காவது வாரத்தில் தேர்த்திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
அண்மையில் மூன்று நாள்கள் தேர்த்திருவிழா நடந்தது. மூன்றாம் நாளன்று தேர் நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. அப்போது இரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களிடையே திடீரென்று மோதல் உருவானது. இந்த மோதலின்போது விழாவுக்காக சாலையோரம் பொருத்தப்பட்டிருந்த குழல் விளக்குகள், மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இக்கோயிலின் இன்னொரு முக்கியமான தோரோட்ட நிகழ்ச்சி ஒன்றும் நாளை வியாழக்கிழமை (பிப். 13) நடத்தப்பட உள்ளது. ஆனால் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட குழு மோதலுக்கு சுமூகத்தீர்வு காணும் வரை தோரோட்டம் நடத்தக்கூடாது என்று சிலர் கூறினர்.
இதையடுத்து மேட்டூர் வருவாய்க் கோட்டாட்சியர் சரவணன் தலைமையில், ஓமலூரில் புதன்கிழமை (பிப். 12) அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. ஓமலூர் டிஎஸ்பி பாஸ்கரன், முன்னாள் எம்எல்ஏ கண்ணையன், கந்தசாமி, பாலசுப்ரமணி உள்பட தாரமங்கலத்தைச் சேர்ந்த கிராமப் பொதுமக்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வியாழக்கிழமை நடைபெற உள்ள தேரோட்டத்தை பிரச்சனைகள் இல்லாத வகையில் நடத்துவது, சாதி ரீதியிலான மோதலை உருவாக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் யாரும் பிளக்ஸ், பேனர்கள் அச்சடிக்கக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டது.
பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யார் நடந்து கொண்டாலும் தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைதி பேச்சுவார்த்தையின் போது முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவுகளை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதை அடுத்து, கூட்டம் நிறைவு பெற்றது. எனினும், தாரமங்கலத்தில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.