கடந்த 7 ஆண்டுகளாக ஒரு நல்ல காரியத்தைத் தொடர்ந்து செய்துவருகிறார், ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன். தனது எம்.எல்.ஏ. மாத ஊதியத்தை பொதுக் காரியங்களுக்கு மட்டுமே செலவழிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் தனது 90, 91, 92, 93, 94 என 5 மாத ஊதிய தொகை ரூ.5,25,000ஐ ஆதரவற்ற குழந்தைகளின் தேவையை அறிந்து செலவழித்து, அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.
பொன்னகரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மருதுநகரில் இயங்கும் லைட் ஆப் லைப் (Light of Life) குழந்தைகள் காப்பகம் மற்றும் சேத்தூரில் செயல்படும் அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஆகிய மூன்று காப்பகங்களில் உள்ள 235 ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கடந்த 7 வருடங்களாகத் தீபாவளி கொண்டாடுவதற்குப் புத்தாடைகளை வழங்கி வருகிறார். 8வது முறையாக, அந்தக் குழந்தைகளை ராஜபாளையம் ஆனந்தம் சில்க்ஸ் ஜவுளிக்கடைக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்குப் பிடித்தமான புத்தாடைகளை, அவர்களே பார்த்துப் பார்த்துத் தேர்வு செய்யவைத்து, எடுத்துத் தந்துள்ளார்.
கொண்டாட்ட மனநிலையில் இருந்த அந்தக் குழந்தைகளிடம் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. “உங்க எதிர்காலத்தைச் சிறப்பானதாக மாற்றக்கூடிய சக்தி கல்விக்கு மட்டுமே உள்ளது, அக்கல்வியை அனைத்து குழந்தைகளுக்கும் சிறப்பாகவும் தரமாகவும் வழங்க, நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வி உதவித்தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம் மூலம் மாணவ மாணவியர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம், அரசுப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவியருக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு திட்டம் போன்ற சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
மேலும் தமிழ்நாடு அரசு, பள்ளியில் இடைநிற்றலைக் கண்காணித்து, எக்காரணத்திற்காக மாணவ மாணவியர் கல்வியைத் தொடரமுடியவில்லை என்பதை ஆராய்ந்து, அதனையும் சரிசெய்து கல்வித்துறையைச் சிறப்பாக வழிநடத்தியும் நிர்வகித்தும் வருகிறது. இந்த நிர்வாகத் திறமைக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். அதனால், அனைத்துத் துறைகளும் சீராக வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது” என பேசினார். இதனைத்தொடர்ந்து, குழந்தைகள் அனைவரையும் கவனமாகக் காப்பகத்திற்குச் செல்லுமாறு அனுப்பிய தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., “நீங்கள் ஆதரவற்ற குழந்தைகள் அல்ல. அனைவரது ஆதரவு பெற்ற குழந்தைகள்..” எனக் கூறி, தீபாவளி நாளில் பட்டாசுகளைக் கவனமாக வெடித்துக் கொண்டாடுமாறு அறிவுறுத்தினார்.