Skip to main content

பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்

Published on 04/01/2023 | Edited on 04/01/2023

 

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற செவிலியர்களை பணி நீக்கம் செய்த தமிழக அரசைக் கண்டித்தும், நிரந்தர பணி வழங்கக் கோரியும் சென்னையில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ இயக்குநரக வளாகத்தில் போராட்டத்தில் செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களாக பணியாற்றி வந்த 3000க்கும் அதிகமான செவிலியர்களை டிசம்பர் 31 ஆம் தேதி தமிழக சுகாதாரத்துறை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதில் பணி வாய்ப்பை இழந்த செவிலியர்கள், தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வரக்கூடிய நிலையில், சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவின் தேர்தல் அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு எழுதி வெற்றி பெற்று பணியாற்றி வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதாகச் சொல்லிவிட்டு, தற்போது 3000க்கும் அதிகமான செவிலியர்களை பணி நீக்கம் செய்து விட்ட திமுக அரசுக்கு எதிராகப் பதாகைகளை ஏந்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கியதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு பொய்யான தகவலைச் சொல்லி வருவதாகவும் செவிலியர்கள் குற்றம் சாட்டினர். தமிழக சுகாதாரத்துறை தற்போது பணி நீக்கப்பட்ட செவிலியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுப் பணி என்பது, அதுவும் ஒரு தற்காலிக பணிதான் என்றும், அடுத்த 11 மாதம் கழித்து மீண்டும் எங்களுக்குப் பணி வாய்ப்பு கேட்டு போராடக்கூடிய ஒரு நிலையில்தான் அந்தப் பணியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் வழங்கி இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்