தற்காலிக சமரசம் - எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில்
எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க முடிவு!
எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க முடிவு!
கடலூர் மாவட்டத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், கடலூர் எம்.எல்.ஏவுமான அமைச்சர் சம்பத்துக்கும், கடலூர் தொகுதி எம்.பியும், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான அருண்மொழிதேவனுக்கும் கடந்த சில மாதங்களாக பூசல் நிலவி வந்தது.
அருண்மொழித் தேவனுடன் மாவட்டத்தின் மற்றொரு எம்.பியான சிதம்பரம் சந்திரகாசி, எம்.எல்.ஏ க்கள் பண்ருட்டி சத்யா, காட்டுமன்னார்குடி முருகுமாறன், விருத்தாசலம் கலைச்செல்வன், சிதம்பரம் பாண்டியன் ஆகியோரும் கைகோர்த்து கொண்டு அமைச்சர் சம்பத் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்தனர்.
இதனால் வருகிற 16-ஆம் தேதி கடலூரில் நடக்க இருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் மாவட்டத்தின் எம்.பி-எம்.எல்.ஏ. க்கள் பங்கேற்பாபார்களா? என்கிற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் இவர்களின் இடையே உள்ள பிரச்னை தற்காலிமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. அதனால் 16-ந் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இது சம்பந்தமாக கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில் சிதம்பரத்தில் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் அருண்மொழிதேவன் எம்.பி. தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சட்ட மன்ற உறுப்பினர்கள் பாண்டியன் முருகுமாறன், மற்றும் ஏராளமான அ.தி.மு.க. பிரமுகர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இக்கூகூட்டத்தில் நூற்றாண்டு விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.
இதேபோல் பண்ருட்டியில் எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் தலைமையில்நடந்த கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமியை வரவேற்க 300 வாகனங்களில் அணி வகுத்து செல்வது என முடிவெடுக்கப்பட்டது.
விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் வி.டி. கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சட்டமன்ற உறுப்பினர் வி.டி.கலைச்செல்வன்,"விருத்தாசலம் தனி மாவட்டமாக ஆக்குவதை தடை செய்து வருவதாலும், விருத்தாசலம் தொகுதிக்கு வரக்கூடிய திட்டங்களை செயல்படவிடாமல் தடுத்து வந்ததாலும் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் அரசு விழாக்களை புறக்கணித்தோம் " என கூறினார்.
- சுந்தரபாண்டியன்