Skip to main content

பூ வியாபாரியை கொன்றது ஏன்? வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம்! 

Published on 21/05/2023 | Edited on 21/05/2023

 

Teenagers sensational confession in youth passes away case in vazhapadi

 

வாழப்பாடி அருகே, பூ வியாபாரி கொலை வழக்கில் 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் கொலைக்கான பின்னணி குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருளே உள்ள பிச்சாம்பாளையம் வடக்குக்காட்டைச் சேர்ந்தவர் சுப்பராயன். இவருடைய மகன் சக்திவேல் (23). முத்துமலை முருகன் கோயில் அருகில் பூ வியாபாரம் செய்து வந்தார். இவர், மே 17ம் தேதி மாலையில், தனது வீட்டிற்குச் செல்லும் வழியில் வடக்குக்காடு பகுதியில் சாலையோரம் விழுந்து கிடந்தார். தலையின் பின்பக்கத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, அதிகளவில் ரத்தம் வெளியேறி இருந்தது. 

 

தகவல் அறிந்த பெற்றோர், சக்திவேலை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் சக்திவேலின் பின் தலையில் கத்தியால் வெட்டியதால்தான் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. மருத்துவமனை தரப்பில் இதுகுறித்து வாழப்பாடி காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. 

 

காவல் ஆய்வாளர் உமாசங்கர் மற்றும் காவலர்கள் நிகழ்விடம் சென்று விசாரித்தனர். இதற்கிடையே, மேல் சிகிச்சைக்காக சக்திவேலை, கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மே 18ம் தேதி இரவு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

 

விசாரணையில், துக்கியாம்பாளையத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் (22), அவருடைய உறவினரான 17 வயது சிறுவன், கொண்டலாம்பட்டி பெரிய புத்தூரைச் சேர்ந்த மைக்கேல் (24) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து சக்திவேலை கத்தியால் வெட்டிக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. 

 

இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தோம். “கொலையாளிகளில் ஒருவரான சதீஸ்குமாருக்கு 17 வயதில் ஒரு தங்கை இருக்கிறார். கடந்த ஓராண்டுக்கு முன்பிருந்து சக்திவேலும், சதீஸ்குமாரின் தங்கையும் காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த பெண்ணின் பெற்றோர், மகளுக்கு 18 வயதுகூட ஆகவில்லை என்றும், அவள் மேஜர் ஆன பிறகு கல்யாணம் குறித்து பேசலாம் என்றும் சக்திவேலிடம் கூறியுள்ளனர். 

 

மகள் பிளஸ்2 முடிக்கும் வரை பொறுமையாக இருக்குமாறு சதீஸ்குமாரும் எச்சரித்துள்ளார். ஆனாலும், சக்திவேல் காதலைக் கைவிடவில்லை. மேலும் சக்திவேல், தன் காதலிக்கு புதிதாக அலைபேசி வாங்கிக் கொடுத்து, ரகசியமாக காதலித்து வந்துள்ளனர். 

 

கடந்த சில நாள்களுக்கு முன்பு தங்கையிடம் இருந்த அலைபேசியை பறித்துக்கொண்டு சதீஸ்குமார், அவரை கண்டித்துள்ளார். இதே நிலை தொடர்ந்தால் தன் குடும்பம் மானம் போய்விடும் எனக்கருதிய சதீஸ்குமார் தன் உறவினர்களுடன் சேர்ந்து சக்திவேலை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதையடுத்து சதீஸ்குமார் உள்ளிட்ட மூன்று பேரும் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு சக்திவேலின் வருகைக்காக காத்திருந்தனர். அன்று மாலை 4 மணியளவில் அவர் மோட்டார் சைக்கிளில் வடக்குக்காடு பகுதியில் தனியாக வந்தபோது மூவரும் அவரை மடக்கி, பின் தலையில் கத்தியால் வெட்டியுள்ளனர். 

 

இதில் பலத்த வெட்டு விழுந்ததால் சக்திவேல் அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கிச் சரிந்தார். அவர் இறந்து விட்டதாகக் கருதிய மூவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சக்திவேல் இறந்துவிட்டார்” என்கிறார்கள் காவல்துறையினர். 

 

கைதான மூவரிடம் இருந்து கொலைக்குப் பயன்படுத்திய கத்தி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில், சதீஸ்குமார், மைக்கேல் ஆகிய இருவரும் ஆத்தூர் மாவட்டச் சிறையிலும், 17 வயது சிறுவன் சேலம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்