
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் மலை கிராமத்தில் வனத்துறையின் சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக ராமக்கா பணியாற்றி வருகிறார். இவர் செப்டம்பர் 4 ந்தேதி பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி உள்ளார். நடத்திய பாடத்துக்கு சிறப்பு தேர்வு நடத்த கேள்விகளை கூறி தனித்தனியாக அமர்ந்து பதில் எழுதச்சொல்லியுள்ளார். இதில் மாணவிகள் சிந்து, ராஜகுமாரி, காவ்யா ஆகிய மூன்று மாணவிகள் ஆசிரியை கொடுத்த கேள்விகளுக்கு விடை எழுதாமலும், ஆசிரியைக்கு சொல்லாமல் வீட்டிற்கு சென்று விட்டனர்.
இந்நிலையில் செப்டம்பர் 5ந்தேதி பள்ளிக்கு வந்த அம்மாணவிகளை ஆசிரியை ராமக்கா அழைத்து கண்டித்தும், தலைமை ஆசிரியை பார்த்து அவரிடம் நடந்தவற்றை கூறி மீண்டும் வகுப்புக்கு வாருங்கள் என்று அனுப்பிவிட்டார். மூன்று மாணவிகளும் தலைமை ஆசிரியரை சந்திக்காமல் யாருக்கும் தெரியாமல் பள்ளிக்கு வெளியே வந்து அரளி விதைகளை பறித்து சாப்பிட்டுள்ளனர். இதில் வாந்தி மயக்கம் ஏற்பட்ட மாணவிகளை பொதுமக்கள் மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவிகளுக்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து ஜமுனமரத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவிகளின் இந்த செயலால் ஜமுனமரத்தூர் பள்ளியில் பரபரப்பு காணப்படுகிறது.
உண்மையில் ஆசிரியர் கண்டித்ததால் தான் அரளி விதையை பறித்து சாப்பிட்டு உயிர் விட துணிந்தார்களா அல்லது வேறு காரணம் ஏதாவது உள்ளதா என போலிஸ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக கல்வித்துறை அதிகாரிகள் இன்று செப்டம்பர் 6 ந்தேதி மலைக்கு சென்றுள்ளார்கள் என்கின்றனர்.