ராமநாதபுரத்தில் டீக்கடையை பூட்டிவிட்டு படுத்திருந்த டீக்கடை உரிமையாளரிடம் குட்கா கேட்டு இரண்டு இளைஞர்கள் தாக்குதல் நடத்தியதோடு மற்றொரு நபரிடம் ஐந்தாயிரம் ரூபாய் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் குமாராண்டிவலசையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் நதிப்பாலம் பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் டீக்கடையை இரவில் அடைத்து விட்டு கடையின் முன்பு படுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் அவரை எழுப்பி குட்கா கேட்டு தகராறு செய்தனர். தன்னிடம் குட்கா இல்லை என டீக்கடை உரிமையாளர் தெரிவித்த நிலையில், அவர்கள் கையில் கிடைத்த பொருட்களை எடுத்து அவரை தாக்கினர்.
பின்னர் அங்கிருந்து சென்ற அந்த இரண்டு இளைஞர்கள் அம்மாபட்டினத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒருவரை கத்தியைக் காட்டி மிரட்டி ஐந்தாயிரம் ரூபாயை பறித்ததோடு, அவரிடம் இருந்து செல்போனையும் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து உச்சிப்புளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணை மேற்கொண்ட போலீசார் டீக்கடையில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை செய்து பெருங்குளத்தைச் சேர்ந்த காளீஸ்வரன், வெங்கடேசன் என்ற இருவரைத் தேடி வருகின்றனர்.