தஞ்சை மாவட்டம், காவல் சரக பகுதிகளில் சமீப நாட்களாக கொலைகள் சர்வ சாதாரணமாக நடக்கத்துவங்கி இருக்கிறது. "உப்புக்கு புரியோஜனம் இல்லாத விவகாரங்களுக்குகூட கொலையா" என பொதுமக்கள் குலை நடுங்கும் அளவிற்கு மாவட்ட சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக்கிடக்கிறது.
கொலைகள் சர்வதாரனமாக நடப்பதற்கு காவல்துறையின் அலட்சியமும், மாவட்ட காவல் கண்கானிப்பாளரின் கவனமின்மையுமே காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார்கள் விவரம் அறிந்த சில வழக்கறிஞர்கள். அதற்கு சான்றாக அமைந்திருக்கிறது சோழபுரம் கொலை.
தஞ்சை மாவட்டம் சோழபுரம் தோப்பு தெருவை சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மகன்கள் அருண்குமார், அரவிந்தன் சொந்தமாக கார்வைத்துக்கொண்டு டிராவல்ஸ் நடத்துகின்றனர். அதோடு அப்பகுதியில் மீன்குட்டை வைத்திருக்கிறார்கள்.
பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு கேட் சில நாட்களுக்கு முன்பு திருட்டு போயிருக்கிறது, சோழபுரம் ராமானுஜபுரம் பகுதியை சேர்ந்த காரல் மார்க்ஸ், நரேஷ், ராஜேஷ், சதீஷ் ஆகியோர் தான் தனது இரும்பு கேட்டை திருடியதாக சந்தேகித்த பூமிநாதன் திருப்பனந்தாள் போலீசில் புகார் செய்துள்ளார். இதை தெரிந்துகொண்ட காரல்மார்க்ஸ் உள்ளிட்ட அவரது நன்பர்கள் பூமிநாதனுக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். அதையும் திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் கூறியிருக்கிறார். அதை காவல்துறை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் போனதால், மாணிக்க நாச்சியார் கோவில் பகுதியில் தனது மகன்களுடன் இருந்த பூமிநாதனை காரல் மார்க்ஸ், நரேஷ், ராஜேஷ், சதீஷ் ஆகிய நான்கு பேரும் தகராறு செய்துள்ளனர்.
அப்போது உடனிருந்த பூமிநாதனின் மகன் அரவிந்தன் தட்டிக் கேட்டுள்ளார். ஆந்திரமடைந்த அந்த கும்பல் அரவிந்தனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். தடுக்க ஓடிய அவரது சகோதரர் அருண்குமாரையும் சரமாரியாக வெட்டினர். அவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். இதனை தடுக்க ஓடிய அதே பகுதியை சேர்ந்த அரவிந்தனின் நண்பர்கள் சந்தோஷ், மோகன் என்பவர்களையும் அந்த கும்பல் வெட்டி வெறியை தீர்த்துக்கொண்டது.
பிறகு வழக்கம்போல் செய்தியறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை தேடி வருகின்றனர். அதோடு அச்சத்தோடு இருந்த அப்பகுதி மக்களுக்கு துனிச்சல் அடைய செய்யும் வகையில் ஐ.ஜி. ஜெயராமன் தலைமையில் போலீஸார் அணிவகுப்பு நடத்தியுள்ளனர்.
"கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசில் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது. சாதாரண இருநூறு ரூபாய் பொருமானமுள்ள இரும்பு கேட்டுக்காக இந்த கொலை நடந்திருக்கிறது. ஏற்கனவே பல திருட்டு வழக்கில் தொடர்புடையவர்களை காவல்துறை, அவர்களை கண்கானிக்காமல் விட்டுவிட்டது, அதோடு தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க தவறியதால் இந்த கொலை நடந்திருக்கிறது, இந்த கொலைக்கு முழு பொருப்பு காவல்துறைதான்.
இந்த சம்பவம் போலவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நாச்சியார்கோயில் பகுதியில் வழக்கறிஞர் ஒருவரும், அவரது நண்பரும் படுகொலை செய்யப்பட்டனர், இரண்டு சம்பவமும் திருவிடைமருதூர் மாவட்ட காவல்துணை கண்கானிப்பாளர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்நிலைய பகுதி.
திருவிடைமருதூர் டி.எஸ்.பி. சட்டம் ஒழுங்கை பற்றி கவலைப்பட்டதே கிடையாது. அதே போல மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் கொடுக்க வேண்டிய தனிப்பிரிவு போலீஸாரும் பணியில் அலட்சியமாக உள்ளனர். தகவல் கேட்கவேண்டி மாவட்ட எஸ்.பி.யும் அதை பற்றி கவலைகொள்வதில்லை, அதனால் இப்படி தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நடக்கிறது.
நாச்சியார்கோயில், திருப்பனந்தாள் காவல்நிலைய ஆய்வாளர்கள் கடமை தவறியதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் உயர் அதிகாரிகள், அவர்களை முறையாக கண்கானிக்காமல் கடமை தவறிய திருவிடைமருதூர் டி,எஸ்,பி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை" என்கிறார் தகவல்களை நன்கு தெரிந்த கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த நேர்மையான காவலர் ஒருவர்.