தட்பவெப்பத்தால் தமிழர்கள் தோல் நிறத்தால் மாறுபட்டிருந்தாலும், உள்ளத்தால் பால் போல வெள்ளை மனம் படைத்தவர்கள். அவர்கள் செய்த உதவிகளை எப்போதும் மறக்க மாட்டோம் என்று குடிபெயர்ந்தோர் நேபாளியர் சங்க மத்திய ஆலோசகர் டிகா பவுடேல் நெகிழச்சியுடன் கூறினார்.
நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு 34 பேர் கொண்ட குழுவினர் சுற்றுலா வந்திருந்தனர். வட இந்தியாவில் பல கோயில்களை சுற்றிப்பார்த்த அக்குழுவினர் தமிழ்நாட்டில் கன்னியாகுமரிக்குச் சென்றுவிட்டு, பிப். 20ம் தேதியன்று சேலம் வழியாக ராஜஸ்தான் மாநிலத்திற்கு ஒரு மினி பேருந்து மூலம் சென்று கொண்டிருந்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நரிப்பள்ளம் என்ற இடத்தில் சென்றபோது, நேபாள நாட்டினர் சென்ற மினி பேருந்து மீது பெங்களூருவில் இருந்து வந்து கொண்டிருந்த சொகுசுப் பேருந்து பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில். நேபாளத்தைச் சேர்ந்த டீக்காராம் (55), புல்கரிசவுத்ரி (50), பீர்பகதூர் ராய் (55), கோபால் தமங் (56), விஷ்ணு தாங்கல் (60), போதினி (55), ராசிலால் சவுத்ரி (65), முராத்தி (70) ஆகிய 8 பேர் உயிரிழந்தனர். இவர்களில் போதினி, புல்கரி சவுத்ரி ஆகிய இருவரும் பெண்கள்.
இச்சம்பவம் குறித்து இந்தியாவில் உள்ள நேபாள தூதரகம் மூலம் அந்நாட்டில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேபாள தூதரக அதிகாரி பாபுராம் சிக்தேல், சடலங்களை சேலத்தில் இருந்து நேபாளத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார்.
இதையடுத்து குடிபெயர்ந்தோர் நேபாளியர் சங்க மத்திய ஆலோசகர் டிகா பவுடேல் தலைமையில் அதிகாரிகள் கு-ழுவினர் பிப். 23ம் தேதி சேலம் வந்தனர். அவர்கள், விபத்தில் காயம் அடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 26 பேரையும் சந்தித்து நலம் விசாரித்தனர். சடலங்களை சொந்த நாட்டிற்குக் கொண்டு செல்வதற்கான உதவிகளைச் செய்யுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், மாவட்ட எஸ்பி தீபா கனிகர், கோட்டாட்சியர் மாறன் ஆகியோரிடம் அக்குழுவினர் கேட்டனர். அதன்பேரில் தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்தது.
இதையடுத்து பிப். 23ம் தேதி மாலையில், உயிரிழந்த 8 பேரின் சடலங்களும் நேபாள நாட்டில் இருந்து வந்த குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ரெட்கிராஸ் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் உடல்கள் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் நேபாளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. இதற்கான போக்குவரத்துச் செலவுகளை முத்தூர் நிதிநிறுவனத்தினர் ஏற்றுக்கொண்டனர்.
சடலங்களைப் பெற்றுக்கொள்வதற்காக வந்திருந்த குடிபெயர்ந்தோர் நேபாளியர் சங்க மத்திய ஆலோசகர் டிகா பவுடேல் கூறுகையில், ''விபத்து நடந்தது முதல் ஜாதி, மத பாகுபாடுகள் இல்லாமல் பல்வேறு உதவிகளை தமிழக மக்கள் எங்களுக்கு செய்துள்ளனர். மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பிலும் பல ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளனர். இந்த உதவிகளை எந்தக் காலத்திற்கும் மறக்க மாட்டோம்.
நான் சொல்வதை தவறாக கருத வேண்டாம். இங்குள்ள தட்பவெப்பத்தால் தமிழர்கள் தோல் நிறத்தால் வேறுபட்டிருந்தாலும், உள்ளத்தால் பால் போன்ற வெள்ளை மனம் படைத்தவர்கள். அதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது,'' நெகிழ்ச்சியுடன் கூறினார்.